» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?

வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நாளை மதியம் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்கூட்டியே வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். 

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக பியூஷ் கோயலை சந்தித்து தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory