» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலமேடு ஜல்லிக்கட்டு: முதலிடம் பெற்ற வீரருக்கு கார், சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசு!
சனி 17, ஜனவரி 2026 8:37:32 AM (IST)

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் முதலிடம் பெற்ற வீரருக்கு காரும், சிறந்த காளை உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளில் மதுரை அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.
நேற்று பாலமேட்டில் விறுவிறுப்பாக நடந்தது. இதையொட்டி 2 இடங்களிலும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வந்தன. சுற்றுகள் வாரியாக இறக்கிவிடப்பட்ட வீரர்கள் போட்டிபோட்டு பிடித்தனர். கேலரிகள் மட்டுமின்றி திடலின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆரவாரத்துடன் போட்டியை ரசித்தனர்.வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொரு சுற்றுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் டி-சர்ட் அணிந்து வீரர்கள் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். சக்திவேல் என்ற வீரருக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். அவருடன் நடிகர் சூரியும் அமர்ந்து போட்டியை ரசித்தார். ஆக்ரோஷ காளைகள், வீரர்களை புரட்டி எடுத்தன. அதே நேரத்தில் தெனாவட்டு காளைகளை விடாப்பிடியாக பிடித்து வீரர்கள் விளையாடியபோது கைதட்டல்கள் அடங்க நீண்ட நேரம் ஆகியது.
சில மாடுகள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தன. முக்கிய பிரமுகர்கள் வளர்க்கும் காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டு முன்னே வந்தனர். ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இளம்பெண்கள் சிலர் காளைகளை போட்டிக்கு அழைத்து வந்திருந்தனர்.
நடிகர்கள் ஜீவா, அருண்பாண்டியன் உள்ளிட்ட திரைபிரபலங்களும் பார்வையிட்டனர். இதில் நடிகர் சூரியின் காளை 2-வது சுற்றில் களம் இறங்கி வெற்றி பெற்றது. போட்டி மாலை 6.45 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 868 காளைகள் களம் இறக்கப்பட்டன. 461 வீரர்கள் களம் இறங்கினார்கள். காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என 43 பேர் காயம் அடைந்தனர். அதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1190 காளைகளுக்கும், 938 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எனவே களம் இறங்காத காளைகளுக்கும், வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் முடிவில் மதுரை மாவட்டம் பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்ற வீரர், 17 காளைகள் அடக்கி முதல் இடம் பிடித்தார். அவருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கிய மதுரை பொதும்புவை சேர்ந்த பிரபாகரனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. நாமக்கல் வீரர் கார்த்திக் 11 காளைகள் பிடித்து 3-ம் இடம் பிடித்தார். அவருக்கும் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக மதுரை குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருடைய காளை முதல் பரிசுக்கு தேர்வானது. அந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளைக்கு, கன்றுடன் பசுமாடு 2-வது பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் வழங்கினார்கள். இதே போல் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், சேர், அண்டா, பாத்திரங்கள், பட்டுச்சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 937 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் வழங்கப்பட்டது.
நெருங்க விடாமல் களமாடிய அவனியாபுரம் மந்தை முத்துகருப்பன் என்ற காளை தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு டிராக்டர் வழங்கப்பட்டது. 55 வினாடிகள் களத்தில் நின்று வீரர்களுக்கு சவால்விடுத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக்வேலுவின் காளை 2-வது இடம் பிடித்து தங்க நாணயம் பரிசாக பெற்றது.
‘நான் கடவுள்’ படத்தில் நடித்த திருநங்கை கீர்த்தனாவின் காளையும் பரிசுகளை அள்ளிக்குவித்தது. போட்டியில், மாடுகள் முட்டியதில் போலீசார், செய்தியாளர், மாடுபிடி வீரர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் உள்பட 60 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 11 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. வெளிநாட்டினர் உள்பட ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்து உள்ளனர். இந்த போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

