» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 1,887 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்!
திங்கள் 5, ஜனவரி 2026 8:25:18 PM (IST)

தூத்துக்குடியில் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 1,887 கல்லூரி மாணவ மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று (05.01.2026), சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மடிக்கணினிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், "நல்ல ஒரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக நாம் எப்பொழுதும் கணினியுகம் என்று குறிப்பிடுவோம். தற்பொழுது அதற்கும் முன்னேறிய நிலையில் ஏஐயுகம் என்று குறிப்பிடுகிறார்கள். ஏஐ உலகம் என்று குறிப்பிடுகின்ற வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு நீங்கள் அனைவரும் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தகத்தை மட்டும் படிக்காதீர்கள். உங்களுக்கு மடிக்கணினி வழங்குகிறார்கள் என்றால், அதனை நல்ல முறையில் உபயோகப்படுத்துங்கள்.
நிச்சயமாக இந்த மடிக்கணினி உங்களுடைய கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும், மேலும் உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு உபயோகமாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிடுவதுபோல் இதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறிக்கொள்கிறேன். தமிழ்நாடு, திட்டங்களை நிறைவேற்றியதில் இந்திய அளவில் ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக ஒரு புதிய வார்த்தைக்கு பொருள் கண்டுபிடிப்பதற்கு அகராதியை (Dictionary) தேடுவோம்.
அதுபோல் என்னவொரு புதிய திட்டம் செயல்படுத்த வேண்டுமென்றாலும், தமிழ்நாடு அரசினுடைய திட்டங்களை நமது இந்தியாவின் பிற மாநிலங்கள் தேடிக் கண்டுபிடித்து செயல்படுத்துகிறது. அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் என்று குறிப்பிடுகின்ற அந்த வரிசையில் இன்றையதினம் உலகம் உங்கள் கையில் என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி, நவீன வசதிகளுடன் கூடிய மடிக்கணினியில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடைய 6 மாத சந்தாவை அரசே செலுத்தி, ஏஐ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
அதுபோல் மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு (Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர்வகை மடிக்கணினியை தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுக்காக வழங்குகிறார்கள்.
நீங்கள் மடிக்கணினியை பெற்று நல்ல முறையில் பயனடையுங்கள். காலத்தை வீணாக்காதீர்கள். காலம் பொன் போன்றது. இந்த வயதில் தான் நீங்கள் படிக்க முடியும். அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், விவசாயம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த 1887 மாணவ மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், துணை மேயர் செ.ஜெனிட்டா, துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன், கல்லூரி முதல்வர், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

