» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!

சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)



நெல்லை அரசு டவுன் பஸ்சில் பணிபுரியும் முதல் பெண் கண்டக்டர் பகவதி ‘சிறப்பாக பணியாற்றுவேன்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

‘ஆணுக்குப் பெண் நிகர்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், விண்வெளி என்று எட்டுத்திக்கும் புகழ் சேர்க்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் பெண் கண்டக்டராக பகவதி (38) என்பவர் சமீபத்தில் பணியில் சேர்ந்து திறம்பட பணியாற்றி வருகிறார். இவர், நெல்லை டவுனில் இருந்து ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். பஸ்சில் சுறுசுறுப்பாக பணியாற்றியும், பயணிகளிடம் கனிவாக பேசியும் கவனம் ஈர்த்து வருகிறார்.

இதுகுறித்து பெண் கண்டக்டர் பகவதி கூறியதாவது: எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே துரைச்சாமியாபுரம் ஆகும். என்னுடைய கணவர் வைரமுத்து, லாரி டிரைவராக உள்ளார். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். 2-வது மகள் பொள்ளாச்சி மாவட்டம் கோத்தனூரில் நர்சிங் படித்து வருகிறார்.

நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். சிறு வயதிலே எனது தந்தை இறந்ததால், உயர்கல்வி படிக்கவில்லை. நான் 8-ம் வகுப்பு படித்தபோது காரை இயக்க முற்பட்டதில் பின்பக்கமாக நகர்ந்ததால் விபத்தில் சிக்கியது. எனவே எப்படியேனும் வாகனங்களை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

வாகனங்களை படிப்படியாக இயக்க கற்றுக்கொண்டேன். கடும் சிரமத்துக்கு இடையிலும் நன்றாக பயிற்சி பெற்று, தற்போது கனரக வாகனங்களை ஓட்டவும், கண்டக்டர் பணிக்கும் சேர்த்து உரிமம் பெற்றுள்ளேன். பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், அதனை நேசித்து பணியாற்றினால் சாதனை படைக்கலாம்.

எனக்கு கனரக வாகனங்களை நன்றாக இயக்க தெரியும். கண்டக்டர் ேவலையையும் நேசித்து செய்கிறேன். இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. என்னை அரசு பணி நிரந்தரம் செய்தால், என்னைப் போன்று பல பெண்களும் ஆர்வமுடன் இந்த பணிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory