» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்: இபிஎஸ்

திங்கள் 22, டிசம்பர் 2025 12:26:58 PM (IST)

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். எந்த ஆட்சிக்கும் ஏற்படாத பிரச்சினைகளை சந்தித்தோம். வறட்சி, பல புயல்கள் மற்றும் கரோனாவை சந்தித்துள்ளோம். கரோனாவுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளோம்.

திமுக ஆட்சியில் கடன் மட்டும் தான் வாங்கி கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சி நிறைவு செய்யும்போது சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் தான் இருக்கும். இதுதான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை. ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன?. திமுகவின் தேர்தல் அறிக்கை, நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தது. ஆனால் செய்தார்களா? இன்று மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியிருக்கிறது. அதனை பாராட்ட திமுக அரசுக்கு மனமில்லை.

100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என கூறினார்கள் செய்தார்களா, டீசல், பெட்ரோல் விலை குறைப்போம் என சொன்னார்கள். இது போல பல கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். விரைவில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும்.

ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை. போலியான வாக்காளர்கள்தான் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகள் என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது. இதில் என்ன குறைபாடு உள்ளது? போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதால் மட்டுமே எஸ்ஐஆருக்கு அதிமுக ஆதரவு தருகிறது.

21 ஆண்டு காலமாக எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. இதனால் இறந்தவர்கள் அனைவரும் திமுக காரர்களால் எழுந்து வந்து ஓட்டு போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் தற்போது எஸ்ஐஆர் பணி முழுமையாக முடிவடைந்து விட்டால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிடுவார்கள். அதனால் தான் ஸ்டாலின் கதறுகிறார், பதறுகிறார். திமுக மக்கள் விரோத அரசாங்கம். திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory