» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி : தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு!

புதன் 17, டிசம்பர் 2025 3:47:00 PM (IST)

திருவள்ளூரில் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலர் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, மாணவ-மாணவியர் பள்ளி வளாகத்தில் சத்துணவு அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு சத்துணவு அருந்திய மாணவர்களில், 7-ம் வகுப்பு மாணவனான, கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மகன் மோகித்(11), பள்ளி நடைமேடை பகுதியில் சத்துணவு அருந்திக் கொண்டிருந்திருந்த போது, ஏற்கெனவே விரிசல் அடைந்த, 4 அடி உயர கைப்பிடிச் சுவர் இடிந்து, மோகித் மீது விழுந்தது. 

இதில், படுகாயமடைந்த மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.கே.பேட்டை போலீஸார், அலட்சியமாக செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், பள்ளி தலைமையாசியர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.1 கோடி மற்றும் அரசுப் பணி வழங்கக் கோரி, திருத்தணி அரசு மருத்துவமனையில் மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த, உறவினர்கள் மறுத்து வருவதால் திருத்தணி, ஆர்.கே.பேட்டை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory