» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில வளர்ச்சியை தடுக்கும் சக்தியை போராடி வெல்வோம்: ஆளுநருக்கு முதல்வர் பதிலடி!
திங்கள் 6, அக்டோபர் 2025 10:27:57 AM (IST)
தமிழ்நாடு யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம்தாழ்த்தி வருவதாக அவர் மீது அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதற்காக சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு வெற்றியும் பெற்றுள்ளது.
இதற்கிடையே மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக ‘தமிழ்நாடு போராடும், வெல்லும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முழங்கி வருகிறார். அவருடைய முழக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பொதுவாகவே கொலை, அடிதடி, வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. குறிப்பாக தலித் மக்களை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதை பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 50 சதவீதத்துக்கு மேல் படிப்பறிவு உள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.
நான் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு சென்று வருகிறேன். பல சுவர்களில் ‘தமிழ்நாடு போராடும்' என்ற வாசகம் தாங்கிய போஸ்டர்களை பார்க்கிறேன். யாருடன் தமிழ்நாடு போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற சிந்தனையுடன்தான் வாழ வேண்டும். நமக்குள் சண்டை, சச்சரவுகள் இல்லை. நாம் ஒன்றாக இணைந்து, வளர்ந்து, வளர்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என ஆளுநர் கேட்டுள்ளார். இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியை கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும். அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும், புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தை பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்துக்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும். ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்கு சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை, தொழில் வளர்ச்சியை, வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராக போராடும். ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக போராடும்.
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்கு காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராக போராடும். தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் வலிமையை குறைக்கும் சதிக்கு எதிராக போராடும்.
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் ‘நீட்' எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும். நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளை பரப்பி, கலவரம் நடக்காதா? என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்.
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும். இறுதியில் தமிழ்நாடே வெல்லும். ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
