» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண மதிப்பிழப்பின்போது ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கிய சசிகலா: சிபிஐ வழக்கு!

சனி 6, செப்டம்பர் 2025 4:05:09 PM (IST)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கியது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

அப்போது போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன் ரூ. 1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

இதனிடையே, காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் தற்போது சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், 2017 ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது, சர்க்கரை ஆலை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரை ஆலையை நிர்வகித்து வந்த ஷிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த வாக்குமூலத்தில், சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு ரூ. 450 கோடி பழைய நோட்டுகளை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்து என அறிவித்திருக்கும் வருமான வரித்துறை, உண்மையான உரிமையாளர் சசிகலா என அறிவித்துள்ளது. இதனடிப்படையில், சர்க்கரை ஆலை நிர்வாகிகள் அனைவரின் பெயரையும் சிபிஐ காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory