» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டச் செலவு ரூ.621 கோடியா?- அன்புமணி அதிர்ச்சி

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:40:33 PM (IST)

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 50 சதவீத்துக்கும் கூடுதலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு கி.மீக்கு ரூ.195 கோடி செலவாவதாகவும் தமிழக அரசால் கணக்குக் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வழக்கமாக இத்தகைய மேம்பாலங்களை அமைப்பதற்கான செலவை விட திட்ட மதிப்பீடு 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் அதிக மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு பல வகையான ஐயங்களை எழுப்புகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவை விட இந்தப் பாலத்தின் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.95 கோடியும், 2022-ம் ஆண்டு மேடவாக்கத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.101 கோடியும் மட்டும் தான் செலவாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கட்டப்படும் மேம்பாலங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்படும் மேம்பாலங்களை விட தரத்திலும் வடிவமைப்பிலும் சிறப்பானதாக இருக்கும் என்பதால் அவற்றின் கட்டுமானச் செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் கட்டப்பட்ட மதுரை-நத்தம் மேம்பாலம் சராசரியாக கி.மீக்கு ரூ.100 கோடி செலவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம் அதை விட 95 சதவீதம் கூடுதல் செலவில் கட்டப்பட்டு வருவது ஏன்? என்பது தான் வினா.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கிளாம்பாக்கம்-மறைமலை நகர், மதுரவாயல்-சென்னை வெளிவட்டச்சாலை இடையேயும், திருப்பெரும்புதூர்-சென்னை வெளிவட்டச் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. தலா 6 வழிப்பாதையும், 3 இடங்களில் மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வசதிகளும் கொண்ட இந்த மேம்பாலத் திட்டங்களுக்கு முறையே கி.மீக்கு ரூ.188 கோடி, ரூ.175கோடி, ரூ.155 கோடி தான் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை விட குறைவாக 4 வழிப் பாதையாக கட்டப்படும் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பாலத்திற்கு அதிக செலவாவது நியாயமல்ல.

சென்னை அண்ணா சாலைக்கு அடியில் மெட்ரோ ரெயில் பாதை அமைந்துள்ள நிலையில், அதன் மீது தூண்களையும், பாலத்தையும் அமைக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்பதிலும், அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அதற்காக இயல்பை விட அதிக செலவாகும் என்பதிலும் ஐயமில்லை.

ஆனால், அந்தக் கூடுதல் செலவு இயல்பை விட 50 சதவீதம் அதிகம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் லாபமடைய வேண்டும் என்பதற்காகவே திட்ட மதிப்பு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.482 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

அடுத்த ஓராண்டில், அதாவது 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்ட மதிப்பீடு ரூ.43 கோடி மட்டும் அதிகரிக்கப்பட்டு ரூ.525 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அடுத்த ஓராண்டுக்குள்ளாக திட்ட மதிப்பீடு 18சதவீதம், அதாவது ரூ.96 கோடி அதிகரிக்கப்பட்டு, ரூ.621 கோடியாக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு இரு ஆண்டுகளில் 29 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பு இயல்பை விட 50சதவீத்துக்கும் கூடுதலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory