» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்குமார் கொலை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:41:52 AM (IST)

அஜித்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரின் விசாரணையின்போது, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் (அதாவது நேற்றைக்குள்) குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரமாக சி.பி.ஐ. விசாரித்தது. நேற்று குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று வந்தது.

அப்போது சி.பி.ஐ. வக்கீல் முகைதீன் பாட்சா ஆஜராகி, "அஜித்குமார் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நகை மாயமானதாக நிகிதா அளித்த புகார் தொடர்பான ஆவணங்கள் இன்னும் சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை. அதுதொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் கொலை வழக்கில் தடய அறிவியல் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற உடன், இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம். அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்” என உறுதி அளித்தனர்.

பின்னர், "அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. முறையாக நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது பாராட்டத்தக்கது. பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அதுதொடர்பான விசாரணையையும் அறிக்கையாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory