» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆய்வுக்கு சென்றபோது பெண் ஊழியரிடம் அத்துமீறல் : அதிகாரியிடம் விசாகா கமிட்டி விசாரணை

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:33:55 AM (IST)

ஆய்வுக்கு சென்ற இடத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து அதிகாரியிடம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாகா கமிட்டி குழுவினர் விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்ட இயக்குனராக இலக்குவன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் களக்காடு அருகே உள்ள வட்டார மையத்திற்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த 20 வயது இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததோடு அவரது கல்விக்கு உதவுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவரின் பிடியில் இருந்து தப்பித்த இளம்பெண் ஓடிச்சென்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். மேலும் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு ஊழியர்கள் மீதான பணியிட பாலியல் புகார்களை விசாரிப்பதற்காகவே துறை ரீதியான மாவட்ட விசாகா கமிட்டி உள்ளது. திட்ட இயக்குனர் இலக்குவன் மீதான பாலியல் புகார் குறித்து விசாகா கமிட்டியின் கவனத்துக்கு வந்தது.

இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இந்த கமிட்டி நேற்று மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவனிடம் விசாரணை நடத்தியது. விசாகா கமிட்டியில் உள்ள ஒவ்வொரு அதிகாரியாக, அவரிடம் விசாரணை நடத்தினர். ஒரு மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நீடித்தது. இதனால் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், விசாரணை அறிக்கை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory