» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வ.உ.சி கண்ட கனவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது: ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:37:37 PM (IST)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி கண்ட கனவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது என்று நெல்லையில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு திட்ட நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாரா தக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு திட்ட நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கதை என்ற தலைப்பிலும், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் நோக்கம் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்ததாவது: மாபெரும் தமிழ்க் கனவு திட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கதை என்ற தலைப்பில் உங்களுடன் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பெருங்கனவு ஆனது உண்ண உணவு, இருக்க இடம், சமமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து என அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அந்தகனவினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் 40 முதல் 45 சதவீதம் நபர்கள் 3 வேளை உணவு அருந்துகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் 99.5 சதவீதம் நபர்கள் 3 வேளை உணவு அருந்துகிறார்கள். இதற்கு அரிசி, சர்க்கரை, எண்ணெண்ணெய், பருப்பு போன்ற குடிமைப்பொருட்கள் 2.15 கோடி மக்களுக்கும் நியாயவிலைக்கடை வாயிலாக கொண்டு செல்வதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஒருவரையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் பணிகள் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் மக்களுக்கும் அனைத்து பொருட்களும் வழங்குவது உறுதி செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதில் உணவு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை கொண்டு வந்ததோடு, மதிய உணவில் சத்து மிகுந்த ஊட்டச்சத்து உணவுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு அரசு மாணவர்களின் சத்துகுறைபாடு போக்குவதற்காக சத்தான உணவு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அனைவருக்கும் கல்வி என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டதன் காரணமாக இன்று 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக்கல்வி பயின்று வருகிறார்கள். மேலும், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல்வேறு திட்டத்தின் வாயிலாக 100 சதவீதம் உயர்கல்வி பயில வேண்டுமென்ற உன்னதநோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
சுகாதாரத்துறையில் பிற மாநிலங்களை காட்டிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பில் சராசரியாக மனிதர்களுக்கு இவ்வளவு மருத்துவர்கள் இருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கும் அதிகப்படியாக மருத்துவர்கள் வாயிலாக பொதுசுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது.
மேலும், தொற்றுநோய் மற்றும் தொற்றாநோய் என உள்ளது. தொற்றுநோயின் தாக்கத்தினை காய்ச்சல், சளி, வயிறு வலி போன்ற அறிகுறி மூலம் கண்டறியலாம். ஆனால் தொற்றா நோயான சர்க்கரைநோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றை எந்தவித அறிகுறி இல்லாமல் நோய் தீவிரமடைந்த பின்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். அதனை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், பாதம் காப்போம் திட்டம் போன்ற திட்டத்தின் மூலம் அவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்தவ வசதிகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருவதன் மூலம் இந்நோய்களின் தாக்கம் குறைக்கப்பட்டு வருகிறது.
முந்தைய காலக்கட்டத்தில் பயணம் என்பது மிகவும் கடினமாக இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு மகளிர் விடியல் பயணம் வாயிலாக அரசுப் பேருந்துகளில் மகளிர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறார்கள். இவ்வாறு, உண்ண உணவு, சமமான கல்வி, பொதுவான போக்குவரத்து என அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்ற கனவினை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது என மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவிக்கையில்: தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து ’மாபெரும் தமிழ்க் கனவு’என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த 2022-23, 2023-24 கல்வியாண்டுகளில் சிறப்பாக நடத்தி முடித்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில், 300 சொற்பொழிவுகள், 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அடுத்த கட்ட நிகழ்ச்சியானது 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு.
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழர் தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இங்கு பகிரப்படும் கருத்துகளைக் கேட்டு, நீங்கள் பயனடைவதுடன் பிற மாணவர்களிடமும் இந்தக் கருத்துகளைக் கொண்டுசேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தகக் காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்கள்.
இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த முறையில் கேள்விகள் தொடுத்தல் 5 மாணவ, மாணவியர்களுக்கும்,சிறந்த கேள்வி நாயகன், கேள்வி நாயகியும், சிறப்பாக வாசித்த 5 மாணவ, மாணவியர்களுக்கு பெருமித செல்வன், பெருமித செல்விக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) காசி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் (பொ) விக்டோரியா, சாரா தக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பெனிசியா கிளாடிஸ் சத்தியதேவி, ஒருங்கிணைப்பாளர் (தமிழாசிரியர்) ராமமூர்த்தி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
