» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று நடைபெற்றது.
மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு மே 10-ம் தேதி புறப்பாடானார். மே 11-ல் மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் எதிர்சேவை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை வரவேற்றனர்.
பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட் போஸ்ட், தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படி உட்பட நூற்றுக்கணக்கான மண்டகப் படிகளில் நேற்று மாலையில் எழுந்தருளினார். இரவு 9 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். பின்னர் இரவு 11.30 மணிக்குமேல் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடி அருள்பாலித்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளி, பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருளினார். பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அங்கிருந்து வைகை ஆறு நோக்கி புறப்பட்டார்.
இதற்கிடையில், வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் 4.35 மணிக்கு வைகை ஆற்றிலுள்ள சந்திப்பு மண்டபத்துக்கு வந்தார். பின்னர் முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள ஆழ்வார்புரம் வைகை கரைக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் நாணயங்களால் ஆன பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாற்றப்பட்டன. கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக காத்திருந்தனர். வீரராகவப்பெருமாள் வரவேற்க, பக்தர்கள் மனங்குளிர கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் 5.59 மணிக்கு எழுந்தருளினார். பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப்பெருக்கில் கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்கள் பலர் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தோல் பை துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சினர். பின்னர் மண்டகப்படியை மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு வையாழி ஆகி பின்னர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாற்றப்பட்டது. பின்னர், இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியில் எழுந்தருளினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, முன்னாள் அமைச்சர் ஆர்,பி.உதயகுமார் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் வைகை ஆற்றிலிருந்து காலை 7.35 மணியளவில் புறப்பட்டு ஆழ்வார்புரம் வழியாக ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு கள்ளழகர் மீது பக்தர்கள் தோல்பை துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிரச் செயவர்.
பின்னர், அண்ணாநகர் வழியாக மண்டகப்படிகளில் எழுந்தருளி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருள்கிறார். நாளை (மே 13) வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். மே 15-ல் பூப்பல்லக்கு நடைபெறும். மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்குப் புறப்படுகிறார். மே 16-ல் இருப்பிடம் திரும்புகிறார். மே 17-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவுபெறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 12, மே 2025 8:58:45 AM (IST)

JAIHINDமே 12, 2025 - 10:48:15 AM | Posted IP 162.1*****