» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)



இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த வகையில் வீரத்துடன் பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொண்ட இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் `இந்திய ராணுவம் வெல்லும்' என்ற தலைப்பில் மாபெரும் பேரணியானது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை மெரினா கடற்கரை சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது.

பேரணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், கோவி செழியன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா மற்றும் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் மும்மத தலைவர்கள், தமிழகத்தில் பணிபுரியும் முப்படை வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள், தமிழ்நாடு போலீசார், ஊர் காவல் படையினர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத்தினர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் `இந்திய ராணுவம் வெல்லும்' என்று பொறிக்கப்பட்ட வெள்ளை நிற தொப்பியை தலையில் வைத்தபடி, அனைவரும் கையில் தேசிய கொடிகளை பிடித்தபடி மிகவும் உற்சாகமாக நடந்து சென்றனர். பேரணியில் சென்றவர்களை சாலையோரம் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நின்று உற்சாகப்படுத்தினர்.

பேரணியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, "தமிழக மக்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையிலும், ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பேரணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் அனைவரும் கலந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

பேரணியானது போர் நினைவுச்சின்னம் அருகே வந்தபோது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் உருவப்படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள், `இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்', `பயங்கரவாதத்தை ஒழித்திட இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நடந்து சென்றனர்.

பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 71 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும், பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் உள்ளிட்டோருக்கு தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.

இது தவிர, நடமாடும் கழிப்பறைகள் 10 இடங்களில் 50 இருக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் 6 இடங்களில் பெண்களுக்கான நகரும் கழிப்பிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவையான குடிநீர் வசதிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஒரு முகாமுக்கு 3000 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் என மொத்தம் 30 ஆயிரம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு: இந்தியாவின் ஆயுதப் படைகளுடன் தமிழ்நாடு ஒருமைப்பாட்டுடன் அணிவகுத்துச் சென்றது. இந்த போர் நிறுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; அமைதி நிலைத்திருக்கட்டும். நமது நாட்டு எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த சல்யூட். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘இந்திய ராணுவம் வெல்லும்' என்ற தலைப்பில் பேரணியானது சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இதன் மொத்த தூரம் 4 கிலோ மீட்டர் ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியாக மாலை 5 மணிக்கு பேரணியை தொடங்கி 5.55 மணிக்கு போர் நினைவுச்சின்னம் வந்தடைந்தார். அதன்படி, சுமார் 1 மணி நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 கிலோ மீட்டர் தூரத்தை நடந்துள்ளார்.



முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி தொடங்கியது முதல் பேரணி முடியும் வரை ஒரே சீரான வேகத்தில் நடந்து வந்தார். பேரணியின் முடிவில், ஒற்றுமையின் அடையாளமாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் லெப்டினண்ட் ஜெனரல் அனந்த நாராயணன், பிரிகேடியர் ரவி, பிரிகேடியர் ஜெயலட்சுமி, லெப்டினண்ட் கர்னல் ரமேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory