» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 20 அறைகள் தரைமட்டம்

சனி 23, மார்ச் 2024 8:22:29 PM (IST)



சங்கரன்கோவில் அருகே மைப்பாறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆனது. மதிய உணவு வேலை என்பதால் பணியாளர்கள் சாப்பிட சென்றதால் பெரும் விபத்து தவிர்க்ப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்ட எல்லை பகுதியான திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்தில் விருதுநகர் மாவட்டம் புலிப்பாறைபட்டியை சேர்ந்த  வெங்கட்ரமணி, என்பவருக்கு சொந்தமான ஏவிஎம் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஆலையை நடத்தி வந்துள்ளார்.நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. 

இன்றும் வழக்கம் போல 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இன்று மதியம் பணியாளர்கள் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த போது திடிரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினார். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்தது மட்டுமின்றி அருகில் இருந்த சுமார் 10 ஏக்கர் பரப்பளவு  தீ பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில், விருதுநகர், கழுகுமலை தீயணைப்பு நிலைய வண்டிகள் ஆலைக்குள் சென்று தீயை அணைக்க முற்பட்டனர்.  அதிக அளவு புகைமூட்டம் இருந்தது மட்டுமின்றி தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால் ஆலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீயணைப்புத் துறையினர் 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சென்று நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இந்த  வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து  சேதமடைந்தன. மேலும் பல அணைகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன

விபத்துனைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார்  ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. விபத்து நடந்த பகுதி அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.‌ மேலும் பொதுமக்கள் பத்திரிக்கையாளர்கள் என யாரையும் ஆலை அருகே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி,சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , சங்கரன்கோவில் டி.எஸ்.பி சுதிர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று வெடி விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .

தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த பின்னர் கட்டிட இடுப்பாடுகளில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர். இதுவரை பணியாளர்கள் யாருக்கும் சிறு காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் தீயணைப்புத் துறையினர் தொடர்ச்சியாக கட்டிட இடுப்பாடுகளில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர். இந்த விபத்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காட்டுப் பகுதியில் இருந்து தீ ஆலைக்குள் வந்ததால்  வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது ‌.  இருந்த போதிலும் முழு விசாரணைக்கு பின்னால் தான் வெடி விபத்துக்கான காரணம் தெரிய வரும். தொடர்ந்து பட்டாசுகள் விட்டு விட்டு வெடித்து வருவதால் தீயணைப்பு துறையினர் தரைமட்டமான இடிபாடுகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். இரவிலும் தீயணைப்பு துறையினர் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory