» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ரூ.6 லட்சம் கோடி : வானதி சீனிவாசன்

வியாழன் 14, மார்ச் 2024 11:19:56 AM (IST)

"தமிழகத்தில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது" என்று பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை புலியகுளத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சியில் அரசு மேடையை, அரசியல் மேடையாக மாற்றி, அநாகரிகமாக பேசி இருக்கிறார். தமிழகத்துக்கு மோடி அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறார். தமிழகத்துக்கு வந்து, பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்களை துவக்கி வைத்த போது, பக்கத்திலேயே அமர்ந்திருந்த தமிழக முதல்வருக்கு தெரியவில்லையா? அப்போது காதுகளை மூடி வைத்திருந்தீர்களா?

கோவையில் அவிநாசி சாலை, உக்கடம் மேம்பாலம், பில்லுார் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை, எந்த ஆட்சியில் திட்டமிட்டு கட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., ஒவ்வொரு முறையும் பொய் பேசியபடிதான் இருக்கும். 1967 முதல் பொய் பேசியே ஆட்சிக்கு வந்த கட்சி அது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 'நீட்' தேர்வுக்கு எதிராக என்று கூறி, இன்று வரை அது பொய்யாகத்தான் இருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு எங்கே தடுத்தது என்று கூறினீர்களே... சென்னை - சேலம் எட்டு வழி சாலை, மத்திய அரசு கொடுத்தபோது தடுத்தது யார்?ஒவ்வொரு முறை மத்திய அரசு திட்டம் வரும் போதும், அதை ஏதாவது ஒரு வகையில் தடுத்து நிறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக அவப்பெயரை உருவாக்க முயற்சி செய்கிறீர்கள்.

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும், தி.மு.க.,வுக்கு கிலி பிடித்தது போல் இருக்கிறது.தற்போது, பா.ஜ.,வை வாட்ஸாப் யுனிவர்சிட்டி என பொய் பேசுகின்றனர். தி.மு.க.,வின் பொய்களும், பொய் வாக்குறுதிகளும் ஒவ்வொரு நாளும், மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டிருக்கிறது. இலவச பஸ் பயணம் என்று அரசு சொல்கிறது. ஆனால் பயணிக்க பஸ்கள் இல்லை. பெண்களை பார்த்தால் பஸ்கள் நிற்காது.

தமிழகத்தில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள், 'டிபன்ஸ் காரிடர்' போன்றவை எல்லாம் யார் கொடுத்தது? 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தில், எத்தனை வீடுகள் கட்டிக் கொடுத்து இருக்கிறோம். ஏழை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு, 6,000 ரூபாய் கொடுத்தது போன்றவை, மத்திய அரசின் திட்டங்களே.

விழித்து கொண்டனர்கடந்த 2019ல் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், 2024ல் தமிழக மக்கள் விழித்து கொண்டனர். தி.மு.க.,வினர் என்னவெல்லாம் செய்கின்றனர், எப்படி எல்லாம் பேசுவர் என்று ஒவ்வொரு நாளும், மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 2024ல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வெற்றி.இவ்வாறு, அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory