» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை தொடங்கப்படும்: மா.சுப்பிரமணியன் தகவல்!

வியாழன் 14, மார்ச் 2024 9:52:33 AM (IST)



தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையிலான சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) கடனுதவியுடன் ரூ.174 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயா் சிறப்பு மருத்துவக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தாா். மேலும், இதே மருத்துவமனையில் ரூ.2.20 கோடியில் கட்டப்படவுள்ள நீராவி சலவையகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதையொட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவத் துறையில் ரூ.397.71 லட்சம் மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் மருத்துவத் துறையில் பெரிய அளவிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 கட்டண படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கட்டண படுக்கை அறைகளுக்கு ரூ.1,000, ரூ.3,000 மற்றும் ரூ.3,500 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையிலான சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள உயா் சிறப்பு சிகிச்சைக் கட்டடத்தில் 100 தீவிர சிகிச்சை படுக்கைகள், 300 சாதாரண படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் ரூ.10 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

புற்றுநோயைத் துல்லியமாக கண்டறிவதற்கு தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே ‘பெட் சிடி ஸ்கேன்’ வசதி இருந்தது. தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூா், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும், சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும் இந்த ‘பெட் சிடி ஸ்கேன்’ அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய தோ்வாளா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் உதகையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றாா்.


மக்கள் கருத்து

கந்தசாமிMar 14, 2024 - 10:47:04 AM | Posted IP 162.1*****

அடப்பாவிகளா இங்குதான் ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெற்றார்கள் இங்கும் உங்கள் வேலையைத் காட்டி விட்டீர்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory