» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்
வியாழன் 7, டிசம்பர் 2023 8:26:41 AM (IST)
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்பட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதலும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 11-ந் தேதியில் இருந்தும் அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் குறிப்பிட்ட சில மணி நேர இடைவெளியில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ந் தேதி முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்துக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். 7-ந் தேதி (இன்று), 8 (நாளை)-ந் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் முறையே 14, 20-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை.