» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்

வியாழன் 7, டிசம்பர் 2023 8:25:17 AM (IST)

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம கும்பல்  வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளி ராஜன் (45), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மதியம் 3 மணியளவில் தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வருமான வரித்துறை அலுவலகம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் சுருளிராஜன் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளால் மோதியது. 

இதனால் அவர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த கும்பல் அரிவாளால் சுருளிராஜனை வெட்ட முயன்றனர். அவர் சுதாரித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார். எனினும் அந்த கும்பல் சுருளிராஜனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பசேரா, பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பிரதீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுருளிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பிச்சென்ற கொலையாளிகளை பிடிக்க அந்த பகுதியில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணப்படை வீடு கிராமத்தில் சுருளிராஜனிடம் பெண் கேட்டது தொடர்பாக அவருக்கும், மற்றொரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் சில பிரச்சினைகளும் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக சுருளிராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மகும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே பட்டப்பகலில் போக்குவரத்து அதிக உள்ள பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory