» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலிலை முழுமையாக மேம்படுத்த விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொன் சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சீ.ரமேஷ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் முன்னிலையில் இன்று (ஜூன் 27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை மற்றும் உடைகள் மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், ஆற்றில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்ததாவது: "ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் தங்கும் வசதி, போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இக்கோயிலை முழுமையாக மேம்படுத்த விரிவான 'மாஸ்டர் பிளான்' (Master Plan) தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காப்புக்காடு பகுதியில் கோயில் அமைந்துள்ளதால், மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறையுடன் கலந்தாலோசித்து, அவர்களின் அனுமதியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருச்செந்தூர் கோயில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் கவுண்டர் டிக்கெட் முறைகள் மேம்படுத்தப்படும். கட்டண மற்றும் இலவச தரிசன முறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் கவிதா பிரியதர்ஷினி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் குமார் உட்படப் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


