» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆறு வரை உள்ள ரயில்வே இருப்பு பாதை தடங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் கீழ் அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் 1980 முதல் 2000 வரை கட்டுமான வேலைகள் போன்ற அமைப்பு சாரா வேலைகளுக்காக கேரளா மாநிலத்திற்கு சென்று வந்தனர். இதனால் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் அதிக ரயில்கள் தேவை இருந்து வந்தது. இதன் காரணமாக நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் உலகமயமாக்கல் வந்த 2000 வது ஆண்டிற்கு பிறகு கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருவனந்தபுரத்துக்கு செல்வதை காட்டிலும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, பெங்களுர் போன்ற நகரங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்கின்றனர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பகல்நேரத்தில் நமது மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் ரயில் போக்குவரத்து என்பது பகல் கனவாகவே உள்ளது.
தற்போது நாகர்கோவிலிருந்து புறப்படும் படியாக ஒரே ஒரு ரயிலாக நாகர்கோவில் - கோவை ரயில் மட்டுமே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நமது மாநிலத்தில் உள்ள பக்கத்து மாவட்ட தலைநகரான திருநெல்வேலிக்கு பல்கலைகழகம், மருத்துவகல்லூரி, மருத்துவமனை , மாநில அரசின் பிராந்திய அலுவலகங்கள், மற்றும் தனியார் அலுவலகங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தினசரி சென்று பணிபுரிந்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் திருநெல்வேலிக்குக்கு உயர்கல்விக்காகவும் தினசரி சென்று வருகின்றனர். இது மட்டுமில்லாமல் மதுரை உயர்நீதிமன்னறத்துக்கும் அதிக அளவிலான பயணிகள் தினமும் பயணம் செய்கின்றார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகையில் சுமார் 65 முதல் 70 சதவிகித மக்கள் கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில் போக்குவரத்துக்கு ஆளூர், இரணியல் பள்ளியாடி, குழித்துறை, குழித்துறை மேற்கு மற்றும் பாறசாலை ரயில் நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதி மக்கள் திருவனந்தபுரத்திலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் சந்திப்பு விட்டுவிட்டு அங்கிருந்து திருநெல்வேலி மார்க்கம் செல்ல அடுத்து ரயில் இணைப்பு வசதி கிடையாது. இதனால் நாகர்கோவில் பேருந்து நிலையம் வந்து பின்னர் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்யும் நிலை உள்ளது. நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து எவ்வளவு பயணிகள் இந்த மார்க்கத்தில் பயணிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
• திருவனந்தபுரத்திலிருந்து தற்போது காலையில் 6:50 மணிக்கு புறப்படும் 56306 ரயில் நாகர்கோவிலுக்கு 8:55 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து அலுவல் பணிகளுக்கு செல்ல வசதியாக காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி செல்லுமாறு காலஅட்டவணை அமைத்து இயக்க வேண்டும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் தற்போது நாகர்கோவிலிருந்து 18:20 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்படுகிறது. இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் போது திருநெல்வேலியிருந்து மாலை 17:15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு தற்போது செல்லும் நேரமான 20:25 மணிக்கு செல்லுமாறு இயக்க வேண்டும்.
• நாகர்கோவிலிருந்து கோயம்புத்தூர்க்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் 16321-16322 எண் கொண்ட நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
• திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வடக்கு இரண்டு பயணிகள் ரயிலை இணைத்து திருநெல்வேலி - திருவனந்தபுரம் வடக்கு ஒரே ரயிலாக இயக்க வேண்டும்.
• கொல்லத்திலிருந்து காலை நேரத்தில் கன்னியாகுமரி நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒரு ரயிலை கன்னியாகுமரி செல்லாமல் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
• கடைசி கோரிக்கையாக நாகர்கோவில் - கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலி,விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகளையும் நிறைவேற்றிய பட்சத்தில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)


