» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்க வேண்டும் என்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான சிறப்பு இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.
முகாமினைத் தொடங்கி வைத்துச் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் பேசியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எனப் பலதரப்பட்ட பிரமுகர்கள் தாமாக முன்வந்து தங்கு தடையின்றி இரத்த தானம் வழங்கி வருவது மிகவும் பெருமைக்குரியதாகும். பொதுமக்களிடையே இரத்த தானம் குறித்து நிலவி வரும் தேவையற்ற அச்ச உணர்வைப் போக்க மருத்துவர்கள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சொந்தத் தாயே தனது மகனிடமிருந்து இரத்தம் பெறுவதைப் பயமாகக் கருதும் தற்போதைய சமூகச் சூழல் முற்றிலும் மாற வேண்டும். இரத்த தானம் செய்வதால் உடலின் ஆரோக்கியம் மேலும் மேம்படும் என்பதை நாம் அனைவருக்கும் விளக்கிக் கூற வேண்டும். எனது கல்லூரிப் பருவ காலங்களில் நான் அதிகளவில் இரத்த தானம் வழங்கியதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் குருதி, திடீர் சாலை விபத்துக்கள், புற்றுநோய் பாதிப்புகள், மகப்பேறு காலக் கர்ப்பிணிப் பெண்கள், இருதய நோய் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைகளின் போது ஏழை எளிய மக்களின் உயிரைக் காக்கப் பெரிதும் பயன்படுகிறது. 'இரத்தம் கொடுப்போம், உயிரைக் காப்போம்' என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி உலக இரத்த தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இம்மாவட்டத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்குப் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்களில் தொடர் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கு முன்னோடியாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் இன்றைய தினம் குருதிக்கொடை வழங்கிய பத்மநாபபுரம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறேன். இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களைத் தவிர மற்ற தகுதியுடைய அனைத்துப் பொதுமக்களும் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்க வேண்டும்." என்று அமைச்சர் செ. ராஜேஷ் குமார் பேசினார்.
முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்கினர்.இந்நிகழ்வில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பொ. ரவிக்குமார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மில்லிங்டோனியா, இரத்த வங்கி மேலாளர் (பொறுப்பு) ராஜன், ஜார்ஜ் ராபின்சன் மற்றும் பல மக்கள் பிரதிநிதிகள், மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியைக் குத்திக் கொன்று கணவன் தற்கொலை: மகன் கண்முன்னே கொடூரம்!
திங்கள் 25, மே 2026 5:00:14 PM (IST)


