» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்

செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துறை அலுவலர்களுடன், ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் -தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்கள கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, சுற்றுலாத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை, வனத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, ஆவின், தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக வேளாண்மை துறையின் கீழ் 9 வேளாண்மை விரிவாக்க மையங்களும், 11 துணை வேளாண்மை விரிவாக்க மையமும், 1 மாநில விதைப் பண்ணையும், 1 உரப் பரிசோதனை நிலையமும், 1 மண் பரிசோதனை நிலையமும் 1 நடமாடும் மண் பரிசோதனை நிலையமும், 1 பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆய்வகமும் செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறையின் கீழ் பேச்சிப்பாறை மற்றும் கன்னியாகுமரியில் தோட்டக்கலை பண்ணையும், 1 சுற்றுச்சுழல் பூங்காவும், புத்தளத்தில் தென்னை நாற்றுப் பண்ணையும், தென்தாரமரைக்குளத்தில் தென்னை ஒட்டு சேர்க்கும் மையமும் மற்றும் பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மற்றும் நிலையங்களை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் வடசேரி, திங்கள்சந்தை, குலசேகரம், ஈத்தாமொழி, களியக்காவிளை மற்றும் தொடுவட்டி ஆகிய 6 இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 11280 செக்டர் நெல் பயிரிடப்பட்டுள்ளது தென்னையில் வெள்ளை பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கு நில உடமை அடையாள அட்டைகள் 187554 பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேளாண்மை துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களான வேளாண்மை இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டம, உழுவை வாடகை திட்டம், சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கும் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம், மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டம், சூரிய மின்வேலி அமைக்கும் திட்டம், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் உள்ளிட்ட திட்டங்களுக்கான மானியங்களினை விவசாயிகள் பெரும் வகையில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இத்திட்டங்களில் அதிகளவு விவசாயிகள் இணைந்து பயன்பெற துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சின்ன முட்டம், குளச்சல், தேங்காய் பட்டினம், முட்டம் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தொடர்ந்து 35 இடங்களில் மீன் இறங்குதளங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மீனவர்களுக்காக செயல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண திட்டம், தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளாந்திர உதவித்திட்டம், இயந்திரமயமான மீன்பிடி படகுகளுக்கு விற்பனை வரி விலக்கு பெட்ரோல் வழங்குதல், குளிரூட்டப்பட்ட வாகனம், இயந்திரம் பொருத்தப்பட்டு மீன்பிடி படகுகளுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இத்திட்டங்கள் அனைத்தும் மீனவர்களை உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மீன்வளத் துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி கீழ் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளான பாதாள சாக்கடை பணிகள், குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்நி செய்தல், தெருவிளக்குகளை சீரமைத்து பாரமரித்தல், கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்டவைகளை தரமானதாகவும், காலதாமதமின்றியும், விரைந்து முடித்திடவும், மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கிடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகள், சந்தை பணிகள், சமுதாய நலக்கூடங்கள், சாலை பணிகள், வடிகால் பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் என நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் தரமானதாகவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் கருங்கல் காமராஜர் பேருந்து நிலைய பணிகள், களியக்காவிளை ஒருங்கிணைந்த பேருந்து முனையப்பணிகள், பாலப்பள்ளம் புதிய பேருந்து நிலையம், தும்பக்கோடு பேருந்து நிலையம், உண்ணாமலை கடை, அழகப்பபுரம், பளுகல், கப்பியறை, கடையால் இடைக்கோடு, வில்லுக்குறி, கீழ்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நகர்ப்புற மற்றும் துணை சுகாதார நிலைய பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தில் ரூ.271.20 லட்சம் மதிப்பீட்டில் 113 வீடுகள் வழங்கப்பட்டு அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் (சுனாமி NGO வீடுகள்) ரூ.294.70 இலட்சம் மதிப்பீட்டில் 254 வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் வழங்கப்பட்டு வீடுகட்டும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.6200.00 இலட்சம் மதிப்பீட்டில் 2000 வீடுகள் வழங்கப்பட்டு 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வீடுகள் பணி முன்னேற்றத்தில் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3500.00 இலட்சம் மதிப்பீட்டில் 1000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அதிகளவில் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், நமக்கு நாமே திட்டம், 15 வது நிதி குழு மானிய திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பள்ளி மேம்பாடு திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாடு திட்டம், முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டம், நபார்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாலப்பணிகள்களையும் விரைந்து முடித்திட வேண்டும். இரயில்வே துறையின் சார்பில் நடைபெற்று வரும் நுள்ளிவிளை பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் போக்குவரத்தினை சீரமைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி வாயிலாக வேளாண்மை கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன், கல்வி கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறையில் வாயிலாக 2025-2026 ம் ஆண்டில் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன், சம்பளப்பிணை கடன், வீட்டு கடன், சிறுவணிக கடன், மாற்றுத்திறனாளி கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், ஆதரவற்ற விதவை கடன், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் கடன், சிறுபான்மையினர் நலக்கடன், இதர கடன்கள் என மொத்தம் 3,68,835 பயனாளிகளுக்கு 4305.55 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளி நலத்துறை வாயிலாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை கை கால், நவீன காதலி கருவி, நவீன மடக்கு, பிரெயிலி கைகடிகாரம், திறன் பேசி, இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான மாற்றுத்திறன் பயனாளிகள் திட்டங்களில் இணைந்து உபகரணங்கள் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்கி உயர்கல்வியில் சேர்த்தல் வேண்டும். இடைநின்ற மாணவர்களின் வருகையை உறுதி செய்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், விபத்து மரண உதவி தொகை, ஈமச்சடங்கு உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை உள்ளிட்டவைகளை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆதி திராவிட நல துறை சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி உள்ளிட்டவைகளை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2025-2026 ஆண்டில் விலையில்லா மிதிவண்டிகள் 12,56 மாணவ மாணவியர்களுக்கும், கல்வி உதவித்தொகை 8,885 மாணவர்களுக்கும், விலையில்லா தையல் இயந்திரம் 182 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1,16,723 நபர்கள் பதிவு செய்துள்ளார்கள். தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளான எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, டிஎன்பிஎஸ்சி, டி.என்.யு.எஸ்.ஆர்.பி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களையும், இலவச தேர்வுகளையும் நடத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம், மூத்த குடிமக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பயனாளிகள் விவரம் கேட்டறியப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்டத்திற்குட்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லங்களை கண்காணித்தல் வேண்டும். 

அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 239 குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இதுவரை 75 தத்தெடுப்பு அணைகள் வழங்கப்பட்டுள்ளது. பாலியலில் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1401 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். 

போஷன் அபியான் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது ஊட்டச்சத்து இல்லா கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கிட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை சார்பில் சிற்றார் அணை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், சூரிய காட்சி முனை, சொத்த விளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்து சமய அறநிலை துறையின் கீழ் நடைபெற்று வரும் புதிய திருமண மண்டபம் கட்டுதல், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி, ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோவில் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எந்தெந்த திட்டங்கள் கொண்டு வந்தால் சிறப்பாக அமையும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தினால் நன்றாக அமையும் என்று நீங்கள் ஒரு அறிக்கை சமர்ப்பித்தீர்கள் என்றால் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மாவட்டத்தில் அந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்வேன். 

தொடர்ந்து துறைவாரியாக திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று என்னிடம் தெரிவித்தால் அந்தந்த துறை அமைச்சர்களிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட வன அலுவலர் அன்பு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாப புரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் சிவகாமி, உயர் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory