» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் –கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான இடங்களை கண்டறிந்து, அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக, நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து அதன் பொறுப்பு அலுவலர்களின் கைபேசி எண்கள் அடங்கிய விபரங்கள் மற்றும் முதல் நிலை மீட்பு அலுவலர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்காலிக தங்கும் முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் (பாய், போர்வை) இருப்பினை உறுதி செய்ய வேண்டும்.
வட்டாரம், நகர்ப்புறப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, சாய்வு பாதைகள், பிரத்தேக கழிவறைகள், மின்சார வசதி, மருத்துவ உதவி உள்ளிட்ட வசதியுடன் தங்குமிடம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைத்தல், மழைக்காலங்களில் இடி மின்னலினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், கால்நடை சேதம் மற்றும் வீடுகள் சேதங்களை உடனுக்குடன் TNSMART இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சேதமடையும் வீடுகளின் பயனாளிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொள் வேண்டும். வாட்ஸ்அப் குழு மூலம் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதநடடிவக்கை மேற்கொள்ள வேண்டும். முந்தைய பருவமழைக்காலங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கூடுதலாக கவனம் எடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வட்ட அலுவலகங்களில் பருவமழைக்காலங்களில் 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும். கோட்ட அளவில் பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். வட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை திட்ட கையேடு -2026 தயார் செய்ய வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தென்மேற்கு பருவமழைக்காலம் முடியும் வரை தங்கள் கிராமங்களுக்குட்பட்ட பகுதியில் தங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காவல் துறையினர் தென்மேற்குப் பருவமழையினால் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க சட்டம் ஒழுங்கு பராமரிப்பினை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சாலையோரம் மரங்கள் விழும் பொழுது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட வேண்டும்.
தீயணைப்பு மீட்புப் பணித்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாரந்தோறும் தீயணைப்புத்துறையின் அவசரகால தொலைபேசி எண்களை குறிப்பிட்டு எச்சரிக்கை அறிவிப்புகள் நாளேடுகளில் வெளியிட வேண்டும்.
வட்ட மற்றும் வட்டார அளவில் மாதிரி வெள்ள மீட்பு ஒத்திகைகள் நடத்தி நாளேடுகளில் விளம்பரம் செய்ய வேண்டும். மரம் அறுக்கும் இயந்திரங்கள், டார்ச் லைட், பைபர் படகுகள் உட்பட அனைத்துவிதமான இயந்திரங்களும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தென்மேற்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுப்படுதல் வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மணல்மூட்டைகள் அடுக்கி போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளம் சூழக்கூடிய மற்றும் தாழ்வான பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளம் சூழ்வதை தவிர்த்தல் வேண்டும். வெள்ள நீர் சீரான முறையில் செல்வதை தடுக்கும் செடி கொடிகளை அகற்ற வேண்டும். ஜேசிபி பொக்லைன், அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மரம் அறுக்கும் இயந்திரம், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காதவாறு சுத்தம் செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருகவேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவா வண்ணம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்களை வலியுறுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்குதல் குளோரின் ஏற்றம் செய்தல், தண்ணீர் மாசுபடுதலை தடுத்தல் மற்றும் அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் 15 தினங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். தங்கும் முகாம்களில் தங்கவைக்கும் மக்களுக்கு சரியான நேரத்தில் உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ய ஏதுவாக கடைகள், சமையல் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றின் விபரங்களை கைவசம் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் அருகிலுள்ள கல்லூரி விடுதி போன்ற அமைப்புகளிடம் பேசி உணவு சமைப்பதற்கு சமையல் கூடங்களை தயார்நிலையில் வைத்தல் வேண்டும்.
மேலும் சமைப்பதற்கு தேவையான நபர்களின் விபரங்களை சத்துணவுத்திட்ட அலுவலரிடமிருந்து பெற்று தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கொடுக்கப்படும் உணவுகள் சூடாகவும், தரமானதாகவும் தயாரித்து வழங்குதல் வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அபாயகரமான கட்டிடங்களை கண்டறிந்து, இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்டிடம் அரசு கட்டிடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும். தனியார் கட்டிடங்களுக்கு கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு 10 நாட்களில் இடித்து அகற்ற நோட்டீஸ் வழங்க வேண்டும். தனியர் இடித்து அகற்றாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே இடித்து அகற்றி அதற்கான செலவீன தொகையினை தனியரிடம் வசூல் செய்ய வேண்டும்.
வட்டாட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் பருவமழைக்காலங்களில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம்-43 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம்-71 அடியாகவும் பராமரித்தல் வேண்டும். அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகபட்சமாக வினாடிக்க 2000 கன அடி என்ற அளவிற்கு மிகாமல் பராமரித்தல் வேண்டும்.
வெள்ள அபாய முன்னெச்சரிக்கைக்கு பிறகு அணைகளிலிருந்து அதிகபட்ச நீர் வெளியேற்றும்பட்சத்தில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவினை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குளங்களில் 80 சதவிகிதம் நீரினை மட்டுமே தேக்கி வைத்தல் வேண்டும். 100 சதவிகிதம் நீர் நிரம்பியுள்ள குளங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நீரினை வெளியேற்ற வேண்டும். குளத்தின் கரையின் நிலைத்தன்மையினை உறுதி செய்ய வேண்டும். குளத்தின் மறுகால் பகுதியின் மூலமாக தண்ணீர் செல்லக்கூடிய ஓடைப்பகுதியில் உள்ள முட்கள், செடி கொடிகள் போன்றவைகள் மூலமாக தண்ணீர் தடைபட்டு தேங்காவண்ணம் அகற்றிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் இணையதளத்தில் நாள்தோறும் பதிவு செய்யும் பொருட்டு தினசரி மழையளவு, அணையின் நீர் மட்ட விபரம், உயிர் சேதம், கால்நடை சேதம், வீடுகள் சேதம் மற்றும் பயிர் சேதம் குறித்த விபரங்களை காலை 7.00 மணிக்குள்ளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர செயல்பாட்டு மையத்திற்கு (1077) தெரிவிக்க வேண்டும். தானியங்கி மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து நல்ல நிலையில் செயல்படுவதை உறுதி செய்து பராமரித்தல் வேண்டும்.
வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களிலுள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்கு வசதியாக, அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் குறித்த விபரப் பட்டியலை தயார் செய்து வைத்திருத்தல் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல் வேண்டும். அனைத்து பொது கட்டிடங்களையும் ஆய்வு செய்து அவை புயல் காற்று மற்றும் மழையில் உறுதியாக இருக்கும் என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் நெடுஞ்சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் மழை வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுதல் போன்ற இடங்களில் உடனடியாக சீரமைப்புப் பணிகள் செய்ய தேவையான நவீன உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் மணல் மூடைகளை தயார் நிலையில் போதுமான அளவு வைத்திருத்தல் வேண்டும்.
மரங்கள் விழுந்து சாலையில் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்படின் மாற்று சாலை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத சாலையாக தேர்வு செய்தல் வேண்டும். தீயணைப்பு துறையினரால் வெட்டப்படும் மரக்கிளைகளை நெடுஞ்சாலை துறை, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தற்காலிக சீரமைப்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்கு பதிவு செய்யப்பட்ட தனியார் ஒப்பந்ததாரர்கள் பட்டியலை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். சாலையோர வாய்க்கால்களில் நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டவர்கள் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சாக்குப் பைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை கொண்டு தேவையான வாகனங்கள் மற்றும் மனிதவளம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். தங்கும் முகாம்களில் சுற்றியுள்ள நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் உணவு தானிய கிடங்கு மற்றும் நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்களை மழை வெள்ளத்தினால் பாதிக்காத வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறையினர் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பகுதி வாரியாக மருத்துவக் குழுக்கள் அமைத்து அவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் ஆகியவற்றை நீர் வழியாக பரவும் தொற்றுநோய்களைத் தடுக்கும் பொருட்டு போதிய அளவு இருப்பு வைத்திருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளதை உறுதி செய்தல் உடனடி மருத்துவ சிகிக்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் போன்ற வசதிகளை மருத்துவமனையில் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
அரசு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், தரைத்தள வார்டுகள், ஆய்வகங்கள், அவசரகால உற்பத்தி உபகரணங்கள், நீர் விநியோகம், மருந்து மற்றும் ஆக்ஸிஜன் வழங்கும் பிரிவுகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை உடனடியாக மதிப்பீடு செய்து, அவற்றின் தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரிக்க செய்தல் வேண்டும். வெள்ளத்தால் பாதிப்படையும் பகுதி மற்றும் தற்காலிக தங்கும் முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிக்க மருத்துவ குழுவினை தயார்நிலையில் வைத்தல் வேண்டும்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் விபரங்களை நாள் தோறும் ஒத்திசைவு செய்தல் வேண்டும். கனமழைக்காலங்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறித்த விபரங்களை பராமரிக்க வேண்டும். அதிக நாட்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு உடனடியாக வானிலை எச்சரிக்கை விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.
மீனவர்கள் மீன்பிடித் தொழில்கள் செய்யும் இடங்களின் விபரம் 100 சதவிகிதம் சரியாக பராமரித்தல் வேண்டும். வானிலை எச்சரிக்கை காலங்களில் மீன்பிடி தொழிலுக்கு செல்லாத வண்ணம் மீனவர்களை கண்காணித்தல் வேண்டும். மீனவர்கள் தங்கள் கட்டுமரம், மீன்பிடி படகு போன்றவை நிலை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
Satellite Phone சரியான முறையில் இயங்குகின்றதா என்பதனை உறுதி செய்ய வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிக்கையினை முறையாக மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு உபயோகிக்கக்கூடிய தனியார் வசம் உள்ள சிறிய அளவிலான படகுகளை முன்கூட்டியே உரிமையாளரிடம் பேசி படகு எந்த இடத்தில் இருக்கிறது என்பதனையும் தெரிந்து அவர்களின் தொலைபேசி எண்களை பெற்று தயார்நிலையில் வைத்திருந்தல் வேண்டும். அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மீன்வளத்துறையில் போதிய அளவு கட்டுமரம், படகு, நீச்சல் வீரர்கள் உள்ளனரா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை செய்தல் வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின்சார இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றம் செய்ய வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார விநியோகத்தை துண்டித்தல் வேண்டும்.
போதிய அளவு மின் கம்பங்கள், மின் வயர்கள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்கம்பங்களை உடனடியாக கொண்டு செல்ல போக்குவரத்து வசதிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறையினர் பருவமழைக்காலங்களில் மிகவும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் கால்நடைகளை கட்டி வைப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பருவமழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் அடர் தீவனங்களை இருப்பு வைத்தல் வேண்டும். நடமாடும் மருத்துவ வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இறந்த கால்நடைகளுக்கு பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை உடனடியாக வழங்கி, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம் உள்ளிட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்து அவை உறுதியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நிவராண முகாம்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்கள் அமைப்பதற்கு பள்ளிகள், கல்லூரிகள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை பகுதியிலிருந்து படகு மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களை மூன்று மாதங்களுக்கு படகில் வருவதை தவிர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயில அறிவுறுத்த வேண்டும். மேற்படி மலையோர கிராமங்களில் அதிக மழை பெய்யும் நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டத்திற்கு மட்டும் விடுமுறை வழங்க சார் ஆட்சியர் பத்மனாபபுரத்துடன் ஒருங்கிணைந்து முடிவு எடுத்தல் வேண்டும்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் பயிர்சேதம் குறித்து கூட்டாய்வு செய்து உரிய படிவ அறிக்கை செய்ய வேண்டும். வனத்துறையினர் பருவமழைக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். தடிக்காரன்கோணம் மலைப்பகுதிகளிலிருந்து கனமழையின் போது அதிக நீர்வரத்து வருவதால் மேற்படி பகுதிகளில் காணப்படும் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (BSNL) கடுமையான வெள்ளம், கனமழை, பலத்த காற்று ஆகியவற்றால் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டால், அவற்றை விரைவாக மீட்டெடுப்பதற்கான மீட்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தினர் தாழ்வான பகுதியில் காணப்படும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை பருவமழையின் போது பாதுகாப்பாக மாற்று மையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை கனமழைக்காலங்களில் மையத்திற்கு வரவழைக்காமல் அவர்களை பெற்றோர்களின் பாதுகாப்பில் வைத்தல் வேண்டும்.
சுற்றுலாத்துறையினர் கனமழை மற்றும் மிககனமழை என எச்சரிக்கை விடப்படும் காலங்கள் மற்றும் கடல் சீற்றம் அதிகமாக உள்ள நாட்களில் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களில் கூடுவதை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதோடு, விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட வன அலுவலர் அன்பு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, உயர் அலுவலர்கள், பேரிடர் வட்டாட்சியர் சுசீலா, வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)


