» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டெல்லிக்கு கப்பம் கட்டும் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது: தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திங்கள் 13, ஏப்ரல் 2026 8:11:07 AM (IST)



கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த மண்ணில், டெல்லிக்கு அடிபணிந்து கப்பம் கட்டும் அதிமுக இந்தத் தேர்தலில் டெபாசிட் கூட வாங்கக்கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்துச் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்காத நிலையில், தமிழக அரசு ரூ.666 கோடி நிதியுதவி வழங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.6,000 வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.30,000 கோடி மதிப்பில் கப்பல் கட்டும் தளம், விண்வெளிப் பூங்கா மற்றும் புதிய சிப்காட் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடன்குடி அனல் மின் நிலையம், விமான நிலைய விரிவாக்கம், திருச்செந்தூர் கோவில் புனரமைப்பு மற்றும் கி.ரா., வீரமாமுனிவர் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டதை அவர் பட்டியலிட்டார்.

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என்று பொய் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் அவரது பொய்கள் அம்பலமாகிவிட்டன. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தை மூடிமறைக்கப் பார்த்தவர் அவர். காலில் விழுவதும், காலை வாரிவிடுவதுமே அவரது அரசியல் வாழ்க்கை" என முதல்வர் கடுமையாகச் சாடினார்.

மத்திய பாஜக அரசுக்குத் தமிழ், தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாசாரம் என்றால் வெறுப்பு என முதல்வர் குறிப்பிட்டார். "மத்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு 4 ஆண்டுகள் ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமியால் நீட் விலக்கைப் பெற முடிந்ததா? அல்லது தமிழகத்திற்கு நிதிதான் வாங்க முடிந்ததா?" எனக் கேள்வி எழுப்பினார்.

"எங்களது தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்'. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தொடக்கம்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வேட்பாளர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிரசாரத்தை முடித்த முதல்வர், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், தமிழக ஆட்சி கழக நிறுவனா் எஸ்ஆர் பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநகர செயலாளர் தனலட்சுமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியார், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஅசன், மூக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Apr 13, 2026 - 09:40:13 AM | Posted IP 162.1*****

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது அரசு வேலையா ? காமெடியாக இருக்கே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory