» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)



குமரி மாவட்டத்தில் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். 

பின்னர் அவர்  பேசுகையில் "ஆதிகாலத்தில் மனிதர்கள் மிருகங்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பயன்படுத்தியது தற்காப்பு கலையாகும். எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இது போர்க்கலையாக மாறியது. தற்காப்பு கலையானது உடலை வலுப்படுத்தவும், மன தையரித்தையும், தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. தற்காப்பு கலை மனித உடம்பில் ஏற்படும் வர்மங்களிலிருந்து காப்பாற்றிட இக்கலை உதவுகிறது. மனித உடம்பில் ஏற்படும் நோய்களிலிருந்து இயற்கை வைத்தியமாக இக்கலை பயன்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அகநிலைப் பயிற்சிகளில் சிறந்த ஆசான்களையும், வீரர்களையும் கொண்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் சில இடங்களில் களரி என்றும் சில இடங்களில் சிலம்பம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலம்பம் என்பது கையில் கம்பு போன்ற உபகரணத்தை வைத்து விளையாடுவது. களரி என்பது பழமையான வீர விளையாட்டாகும். இதனை அடிமுறை என்றும் கூறுவதுண்டு, நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்காலம் முதல் இருந்த தமிழரின் பழைமையான கலையாகும். ஆனால் தற்போது அழிந்துகொண்டு வருகிறது.

இக்கலையினை அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஆராய்ச்சி மையம் அமைப்பது சார்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது கோரிக்கை வைத்தேன். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பராம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். 

ஒலிம்பிக்கிற்கு கொண்டு செல்லும் அளவுக்கு உள்ள விளையாட்டு தான் களரியாகும். சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுக்களுக்கு முன்பாக அறப்போர் என்று கூறி இருக்கிறார்கள். நேரிடையாக போரிடக்கூடிய கலையாகும். இம்மையத்தில் 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறவுள்ளனர், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 2 பயிற்றுநர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000/- வழங்கப்படவுள்ளது. 

இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கலை அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் அமையவுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நம்முடைய பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நல்ல பயிற்சி பெற்ற மாணவர்களும் நம்முடைய மாவட்டத்தில் உள்ளார்கள். மாநில அளவில் பரிசுகள் வாங்கி வருகிறார்கள். இதனை தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று பயிற்சி வழங்கும் அளவுக்கு இக்கலை திகழ வேண்டும். மேலும் இவ்விளையாட்டினை சர்வதேச அளவில் எடுத்து செல்ல வேண்டும்.

இதற்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை திறந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா இராம கிருஷ்ணன், மண்டலத்தலைவர் ஜவஹர், சரவணன், பூதலிங்கம்பிள்ளை, களரி பயிற்சியாளர் ஜாண் வில்சன், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory