» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)
நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் விருதுநகர், பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவிலிருந்து கேரளாவில் உள்ள கோட்டயம் நகரத்துக்கு திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம் வழியாக தினசரி பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலிருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு இரவு 07:35 மணிக்கு கோட்டயம் சென்று சேர்கிறது. மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுவது இல்லை. இது இவ்வாறு வித்தியாசமாக இயக்கப்படுவதால் இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் அமைந்துள்ள தெற்கே கடைசி மாவட்டம் ஆகும். ஆனால் இந்த மாவட்டத்தில் உள்ள இருப்பு பாதைகள் அனைத்தும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் கீழ் உள்ள காரணத்தால் கேரளாவுக்கு பகல் நேரத்தில் பயணம் செய்யும் விதத்தில் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் நாகர்கோவிலிருந்து தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வழித்தடம் அதாவது திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக பகல் நேரத்தில் குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது காலையில் நாகர்கோவில் - மும்பை (06:15), குருவாயூர் - சென்னை (6:33), நாகர்கோவில் - கோவை (07:50) ஆகிய மூன்று ரயில்களும் சென்ற பிறகு மதியம் 12:20 மணிக்கு திருச்சி இன்டர்சிட்டி ரயில் மட்டுமே உள்ளது.
இடைப்பட்ட நேரத்தில் திருநெல்வேலி மார்க்கம் எந்த ஒரு ரயில் சேவையும் தற்போது இல்லை. இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து காலை 06:45 க்கு புறப்பட்டு நாகர்கோவில் 8:55 மணிக்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ரயில்வேதுறை கண்டுகொள்ளவே இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரிலிருந்து ஒரு வழித்தடம் பிரிந்து கிழக்கு கடற்கரை நகரங்கள் வழியாக அதாவது அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் போய் சேருகின்றது.இந்த தடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டத்திலிருந்து இந்த வழித்தடங்களில் செல்ல எந்த ஒரு தினசரி ரயில் சேவையும் தற்போது இல்லை.
ஆகவே இந்த நாகர்கோவில் - கோட்டயம் பகல்நேர ரயிலை திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 5:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு நாகர்கோவில் வந்து பின்னர் தற்போது இயங்கும் கால அட்டவணையில் கோட்டயம் வரை இயக்கலாம்.
மறு மார்க்கமாக இந்த ரயில் அதிகாலை 4:00 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு காலை 10:00 மணிக்கு நாகர்கோவில் விட்டுவிட்டு பின்னர் மாலை 6;00 மணிக்கு திருவாரூர் சென்று சேருமாறு இயக்கலாம். இவ்வாறு திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் அங்கிருந்து வேளாங்கண்ணி, காரைக்கால், திருத்துறைப்பூண்டி, திருநள்ளாறு, மன்னார்குடி, கும்பகோணம் , மைலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு எளிதாக அடுத்த ரயில் அல்லது பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்.
ரத்து செய்யப்பட்ட திருநெல்வேலி – மைலாடுதுறை ரயில்
கோரோனா காலத்துக்கு முன்பு திருநெல்வேலியிருந்து மைலாடுதுறை மற்றும் ஈரோடுக்கு செல்லத்தக்க வகையில் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பல்வேறு மாற்றங்கள் செய்து தற்போது செங்கோட்டை – மைலாடுதுறை என்று இயக்கப்படுகின்றது. இந்த ரயில் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதால் திருநெல்வேலி, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கபட்டி ஆகிய ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகள் மைலாடுதுறை செல்லும் நேரடி ரயிலை இழந்துள்ளனர்.
இதுவரை இதற்கு மாற்று ஏற்பாடு ரயில்வே துறையால் செய்யப்படவில்லை. திருநெல்வேலியிருந்து காலை 09:15 மணிக்கு நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயிலுக்கு அடுத்து மதியம் 13:30 மணிக்கு திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் மட்டுமே உள்ளது. சுமார் நான்கு மணி நேரம் மதுரை மார்க்கம் எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை.
எனவே இதற்கு மாற்றாக இந்த நாகர்கோவில் -கோட்டயம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலி, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கப்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)
