» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

புதன் 24, ஏப்ரல் 2024 11:42:36 AM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வ ரூப தரிசனமும் நடந்தது. 

அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும்,10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான மலர்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறார். பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory