» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல்: சீன ஆதரவு பெற்ற அதிபரின் கட்சி அமோக வெற்றி!

திங்கள் 22, ஏப்ரல் 2024 5:43:05 PM (IST)

மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முயிசுவின் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளூா் நேரப்படி மாலை 5 மணி வரையில் 72.96 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தத் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி), முக்கிய எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 368 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

அதன்படி, அதிபா் மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூயிஸின் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றியது. அடுத்தபடியாக மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபராக யார் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே விரும்பிய சட்டங்களை கொண்டுவர முடியும்.

இந்த வெற்றியின் மூலம் மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தலில் மூயிஸின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில், மூயிஸின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றாா்.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் மாலத்தீவு, இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory