» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிறுமிகள் பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா

திங்கள் 12, பிப்ரவரி 2024 8:13:47 AM (IST)

ஹங்கேரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதற்காக அதிபர் கடாலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் முதல் பெண் அதிபர் கடாலின் நோவக் (46). கடந்த 2022-ல் இவர் அதிபராக பொறுப்பேற்றார். இதற்கிடையே அங்கு அரசு குழந்தைகள் காப்பக நிர்வாகி ஒருவர் கடந்த 2004 முதல் 2016 வரை ஏராளமான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆனால் அந்த நபருக்கு அதிபர் கடாலின் நோவக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். இதற்கு அப்போதைய சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் அனுமதி அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிபர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தநிலையில் அதிபர் கடாலின் நோவக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் அவர் பேசுகையில் `கருணையின் அடிப்படையிலும், அந்த நபர் குற்றத்தை செய்யவில்லை என தான் நம்பியதாலும் பொது மன்னிப்பு வழங்கினேன். ஆனால் நான் தவறு இழைத்து விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறேன். மேலும் நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என கூறினார்.

இதனைதொடர்ந்து அப்போது சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவருக்கான பட்டியலில் உள்ளார். இது ஹங்கேரி நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory