» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கு கடலில் பதற்றம்!

ஞாயிறு 28, ஜனவரி 2024 10:20:07 AM (IST)



அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குல் நடத்தியதால் மத்திய கிழக்கு கடலில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய போர் முடிவின்றி நீண்டு வருகிறது. போர் தொடங்கிய சில வாரங்களிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களம் இறங்கினர். அவர்கள் செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான மற்றும் அந்த நாட்டுடன் வர்த்தக தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறினாலும், இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாத கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையில் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில் செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் போர் கப்பல்கள் மத்திய கிழக்கு கடலில் நிறுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய கிழக்கு கடலில் ஏடன் வளைகுடாவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் கார்னி’ என்ற போர்க்கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபப்பு ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.

அதே வேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற ‘மார்லின் லுவாண்டா’ என்கிற எண்ணெய் கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர். இந்த கப்பல் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory