» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், தங்கள் நிலைப்பாட்டை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் (AIJA) தாக்கல் செய்த மனு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்: 1992-ஆம் ஆண்டில் சுமார் 10,000-ஆக இருந்த விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தற்போது 20,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 568-லிருந்து 1,114-ஆக அதிகரித்துள்ளது.

நீதித்துறை உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்துவதை விட, மாநில அரசுகளே சுயமாக நிர்வாக ரீதியாக முடிவெடுத்து இந்த ஓய்வு வயது உயர்வை நடைமுறைப்படுத்துவது சிறப்பாக இருக்கும் என அமர்வு குறிப்பிட்டது.

விசாரணையின் போது மாநில அரசுகள் தரப்பில் வாதிடுகையில், "நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தினால், பிற அரசு ஊழியர்களிடையே அதிருப்தியும் ஏற்றத்தாழ்வும் ஏற்படும். அவர்களும் இதேபோல வயது உயர் கோருவார்கள். இது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை உண்டாக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களின் இந்த இரண்டு ஆட்சேபனைகளையும் நிராகரித்த உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது: ஒரு நீதித்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது, அரசு அவருக்கு ஓய்வூதியப் பலன்களையும், அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதியையும் வழங்குகிறது. அதே நேரத்தில் காலியாகும் இடத்தை நிரப்பப் புதிய நபருக்கு மீண்டும் முழுச் சம்பளம் வழங்க வேண்டி வருகிறது.

அதற்குப் பதிலாக, அனுபவமும் திறமையும் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை மேலும் சில ஆண்டுகள் பணியில் தக்கவைத்துக்கொள்வது மாநில அரசுக்கும் நீதித்துறைக்கும் நிதி ரீதியாகப் பெரும் பயனையே அளிக்கும்."

உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவு: அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயதைப் பொருட்படுத்தாமல், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது குறித்து மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளின் முடிவுக்கு உயர் நீதிமன்றங்கள் வலு சேர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory