» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)

சத்தீஸ்கரில் கடந்த நான்கு மாதங்களாக 8பேரை கொலை செய்த ராம் சகாய் ஜெய்ஸ்வால் என்ற நபரைப் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கார்வே கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சகாய் ஜெய்ஸ்வால் (46). இவர் தனது கடையில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி எலி மருந்தை வாங்கியுள்ளார். இந்த நச்சுத்தன்மை வாய்ந்த எலி மருந்தை முதலில் ஒரு நாய்க்கு வைத்துச் சோதித்துப் பார்த்துள்ளார். நாய் உடனடியாக இறந்ததைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட எதிரிகளைத் தீர்த்துக்கட்ட இதே எலி மருந்தை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி கிராம மக்கள் இது குறித்துச் சந்தேகமடைந்து காவல் துறையில் முறைப்படி புகார் அளித்தனர்.
தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்:
வழக்கின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், ராய்ப்பூர் மருத்துவ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருந்த 7 பேரின் சடலங்களை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இதில் புத்ராம் ஜெய்ஸ்வாலின் உடல் ஏற்கனவே எரிக்கப்பட்டுவிட்டதால், மற்ற உடல்களின் டிஎன்ஏ மற்றும் உள்ளுறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன. அதில் அனைத்து உடல்களிலும் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் பிடியில் சிக்கிய ராம் சகாய், அற்பக் காரணங்களுக்காகத் தான் செய்த கொடூரக் குற்றங்களை ஒப்புக் கொண்டார். தன்னிடம் இலவசமாக மது கேட்டு மிரட்டியது, தேர்தல் முன்விரோதம், பொது இடத்தில் அவமானப்படுத்தியது, நிலத் தகராறு மற்றும் செய்வினை செய்ததாக எழுந்த சந்தேகம் போன்ற காரணங்களுக்காக இந்த 8 கொலைகளையும் செய்ததாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மகேத்ரு ராம் என்பவரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதற்காகவே அவருக்கு மதுவில் விஷம் வைத்துக் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, கார்த்திக் என்பவருக்கும் ராம் சகாய் விஷம் கலந்த மதுவைக் கொடுத்துள்ளார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தவுடன் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இது குறித்துப் பலுடாபஜார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சர்மா கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள ராம் சகாய் ஜெய்ஸ்வால் மீது 8 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


