» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

Karanatakaforestdep.jpg

கர்நாடகாவில் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடிய 3 வேட்டைக்காரர்களை வனத்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்துப் பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தைச் சூறையாடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே உள்ள மரிமங்கலா வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், வனத்துறை அதிகாரி சேகரய்யா தலைமையில் வனக்காவலர்கள் நேற்று அதிகாலை 5 மணியளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் 4 பேர் மானை வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் சரணடையுமாறு எச்சரித்தபோது, வேட்டைக்காரர்கள் வனத்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் வனக்காவலர் ஒருவர் காயமடைந்தார்.

தற்காப்பிற்காக வனத்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஹனூர் அருகே உள்ள தோமியார்பாளையத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 வேட்டைக்காரர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்தில் இருந்து மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த வனக்காவலர் கொள்ளேகால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

என்கவுண்ட்டரில் 3 பேர் கொல்லப்பட்ட செய்தி பரவியதும், சாக்கியா மற்றும் தோமியார்பாளையம் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். அப்பாவிகளைப் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறி, சாக்கியாவில் உள்ள துணை வனத்துறை அலுவலகத்தையும் ஹனூர் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகப் பொருட்களை வெளியே தூக்கி வீசிச் சூறையாடியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விசாரணை முடிவிலேயே முழு உண்மையும் தெரியவரும் என அவர் கூறினார்.


மக்கள் கருத்து

கந்தசாமிAug 16, 2026 - 12:12:06 PM | Posted IP 162.1*****

அப்போ செத்தது பொது மக்களா பிறகு இறைச்சி எப்படி வந்தது மான் அதுவா இறைச்சி ஆகி விட்டதோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory