» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)
பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போனைப் பறித்துக் கொண்டு ஸ்கூட்டரில் தப்பியோடிய வாலிபர் ஒருவரைப் பொதுமக்கள் துரத்திப் பிடிக்க முயன்ற போது, பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தப்பியோடிய அவரது கூட்டாளியைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
பெங்களூரு அல்சூர்கேட் காவல் எல்லைக்கு உட்பட்ட கப்பன்பேட்டை 14-வது கிராஸ் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஊழியரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு ஸ்கூட்டரில் வேகமாகத் தப்பியோடினர். செல்போனை பறிகொடுத்த ஊழியர், "திருடன்... திருடன்..." எனக் கூச்சலிட்டபடி வாலிபர்களின் ஸ்கூட்டரை நோக்கி விரட்டி ஓடிவந்துள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், சாலையில் சாக்கு மூட்டையில் சரக்குகளைச் சுமந்து கொண்டு நடந்து வந்த தொழிலாளி ஒருவர், நிலைமையை உணர்ந்து தப்பியோடிய ஸ்கூட்டரின் முன் டயரை நோக்கிக் கனமான சாக்கு மூட்டையைத் தூக்கி வீசினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஸ்கூட்டர் கவிழ்ந்தவுடன் நிலைதடுமாறிய 2 வாலிபர்களும், பறித்த செல்போனை அங்கேயே வீசி எறிந்துவிட்டு, தங்களது ஸ்கூட்டரையும் எடுக்காமல் ஓடத் தொடங்கினர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை நாலாபுறமும் சூழ்ந்து பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பியோடிய வாலிபர்களில் ஒருவர் திடீரென அங்கிருந்த நடைபாதையிலேயே நிலைதடுமாறிச் சுருண்டு விழுந்து உயிருக்குத் போராடினார்.
இதைத் தொலைவில் இருந்து பார்த்த அவரது கூட்டாளி, ஓடுவதை நிறுத்திவிட்டுத் தன் நண்பரைத் தூக்குவதற்காக மீண்டும் ஓடிவந்துள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை அதிரடியாகச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர்.
அதே நேரத்தில், மூச்சுத்திணறலுடன் சுருண்டு விழுந்து உயிருக்குத் போராடிய வாலிபரை மீட்டுப் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வாலிபரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஓடும் போது ஏற்பட்ட கடுமையான பயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த அல்சூர்கேட் போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய மற்றொரு வாலிபரைக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பால் உயிரிழந்த வாலிபர் பெயர் ஜூனைத் என்பதும், கைதான அவரது கூட்டாளி பெயர் அர்பாஜ் என்பதும் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த ஜூனைத் ஏற்கனவே கடுமையான இதய நோய்க்காகப் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்தச் ஒட்டுமொத்த சம்பவத்தின் பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


