» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)



அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். 

ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் பயணத்தின்போது, பிரான்சில் நடைபெறும் 52-ஆவது ஜி7 உலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, நாளை (ஜூன் 14) அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இந்தச் சந்திப்பு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான வியூக உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான புதிய கூட்டு முயற்சிக்கான நிகழ்விலும் மோடி மற்றும் மேக்ரான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, இரண்டாவது நாடாக ஸ்லோவேக்கியாவுக்குப் பிரதமர் மோடி பயணிக்கிறார். கடந்த 1993-ஆம் ஆண்டு ஸ்லோவேக்கியா தனி நாடாக விடுதலை பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் அரசு முறைச் சுற்றுப்பயணம் இதுவாகும்.

இப்பயணத்தில் ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு வணிகம், பாதுகாப்பு முதலீடு, ஆட்டோமொபைல் மற்றும் ரயில்வே உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதன் பின்னர், ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்சில் நடைபெறும் 52-ஆவது ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இம்மாநாட்டில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி ஒற்றுமை மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.

பயணத்தின் இறுதிப் பகுதியாக, ஜூன் 18 அன்று பாரீஸ் நகரில் நடைபெறும் இரண்டு முக்கியப் பொது நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் சிறப்புரையாற்ற உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory