» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!

ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)



கோழிக்கோடு அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த 7 மாதக் கர்ப்பிணி உடல் கருகி இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரா அருகே உள்ள செறுவன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லாலு (34). இவரது மனைவி சோனா (27). இத்தம்பதியினருக்குத் திருமணமாகிச் சில ஆண்டுகள் ஆகும் நிலையில், சோனா தற்பொழுது 7 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சோனாவிற்கு ஏற்பட்ட உடல்சோர்வு காரணமாக, லாலு தனது மனைவியைக் காரில் பேராம்பரா அருகே கக்காரமுக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரைச் சந்தித்துவிட்டு, மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இருவரும் அதே காரில் வீடு திரும்பியுள்ளனர். காரை லாலு ஓட்ட, உடல்நலக் குறைவால் சோனா காரின் பின் இருக்கையில் படுத்து உறங்கியபடி வந்துள்ளார்.

கார் பேராம்பரா அருகே தெய்யபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகையுடன் திடீரெனத் தீப்பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த லாலு, உடனடியாகக் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு வெளியே குதித்துள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

காரின் பின் இருக்கையில் படுத்திருந்த கர்ப்பிணி சோனாவை மீட்க லாலு மற்றும் பொதுமக்கள் காரின் பின்பக்கக் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால், தீ விபத்தின் போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாகக் காரின் சென்ட்ரல் லாக்கிங் முறை பழுதடைந்து, பின் இருக்கைக் கதவுகள் உள்பக்கமாகக் கச்சிதமாக லாக் ஆகிக்கொண்டன. இதனால் கதவை எக்காரணம் கொண்டும் திறக்க முடியவில்லை.

அதற்குள் தீ கார் முழுவதும் மளமளவெனப் பரவியதால், அங்கிருந்த பொதுமக்கள் அஞ்சி விலகிச் சென்றனர். எனினும், தனது மனைவியைக் காப்பாற்ற லாலு தீயையும் பொருட்படுத்தாமல் போராடினார். அப்போது கார் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறித் தீப்பிழம்பாக மாறியது.

இதில் காருக்குள் சிக்கியிருந்த சோனா, வெளியில் வர முடியாமல் கண்முன்னே உடல் கருகிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சோனாவின் வயிற்றில் வளர்ந்த 7 மாதச் சிசுவும் காருக்குள்ளேயே துடிதுடித்து இறந்தது. மனைவியைக் மீட்கப் போராடிய லாலுவுக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராம்பரா தீயணைப்புப் படை வீரர்கள், காரில் எரிந்து கொண்டிருந்த தீயைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் காரின் கதவை உடைத்து, உள்ளே கருகிய நிலையில் இருந்த சோனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட லாலு, தீவிரச் சிகிச்சைக்காக அதே கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசரச் சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், காரின் முன் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு  காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இக்கோர விபத்து கேரளா மற்றும் தென் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்மே 17, 2026 - 12:10:12 PM | Posted IP 162.1*****

சரி அந்த கார் மாடல் ஏன் வெளியிடவில்லை? அது பேட்டரி கார் ஆ ? பெட்ரோல் டீசல் கார் ஆ ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory