» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேஷன் பொருட்கள் வழங்க அன்னபூர்ணா தானியங்கி இயந்திரம்: மத்திய அரசின் புதிய அதிரடித் திட்டம்!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:50:32 AM (IST)

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஒருகாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை மாறி, இன்று ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மூலம் எந்நேரமும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. அதேபோல, ரேஷன் பொருள் விநியோகத்தையும் எளிமைப்படுத்தவும், நவீனப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், புகார்கள் குறைந்தபாடில்லை. இதற்குத் தீர்வாக, டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்களை விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களுக்கான 'கூப்பன்' (Coupon), அவர்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்குச் சென்று அந்தப் பதிவெண்ணைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறும் வகையில், ஏடிஎம் இயந்திரத்தைப் போன்ற 'அன்னபூர்ணா' என்ற தானியங்கி இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு முறை: இந்த இயந்திரத்தில் கண் கருவிழி (Iris scan) அல்லது விரல் ரேகை (Fingerprint) மூலம் அடையாளத்தை உறுதி செய்து பொருட்களைப் பெறலாம். மேலும், 'கியூ ஆர்' (QR Code) குறியீட்டைப் பயன்படுத்தியும் பொருட்களைப் பெறும் வசதி உள்ளது.

இந்த இயந்திரம் மூலம் வெறும் 35 விநாடிகளில் 25 கிலோ எடையுள்ள பொருட்களைப் பெற முடியும். அரிசி மற்றும் கோதுமை 5 கிலோ எடையுள்ள பாக்கெட்டுகளாக இதில் வைக்கப்பட்டிருக்கும்.

இது குறித்து மத்திய உணவுத்துறை அதிகாரி கூறுகையில், "குஜராத்தில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொருட்களின் தரம், துல்லியமான எடை மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 அல்லது 3 இடங்களில் இந்தத் தானியங்கி மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்துச் செயல்பாடுகளும் கணினி மூலம் கண்காணிக்கப்படுவதால், பொருட்கள் வாங்குவோர் மற்றும் வாங்காதோர் விவரங்களைத் துல்லியமாக அறிய முடியும். இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்," எனத் தெரிவித்தார். இத்திட்டம் விரைவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory