» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)




வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ம்தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலலைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 (சமத்துவ உரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் வாழ்க்கை உரிமை), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க.வின் மனுவை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதன்படி தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ம்தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory