» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!

செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)



தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (SIR) இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட 49 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், "பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக, இதே கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷன் அனுமதித்த 11 ஆவணங்களோடு ஆதார் அட்டையையும் ஒரு ஆவணமாக கருத்தில் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் 27.10.2025 அன்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த சிறப்பு திருத்தப்பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த திருத்தப்பணி காரணமாக பீகாரில் பல்லாயிரக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அங்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திருத்தத்துக்கு கோரப்பட்டுள்ள ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் இருந்தாலும் கூடுதலாக வயது மற்றும் பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டு ஒரு செயற்கை வகைப்பாட்டை தேர்தல் கமிஷன் கொண்டு வந்துள்ளது. இது, எந்தவொரு நியாயமும் இல்லாதது. சில வாக்காளர்களிடம் இதுபோன்று நியாயமற்ற வகையில் ஆவணங்களை கோருவது ஏற்க முடியாதது.

அத்தகைய ஆவணங்களை வாக்காளர்கள் வழங்கவில்லை என்றால், அவர்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தானாகவே நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தன்னிச்சையானது. இதனால் வாக்காளர்கள் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். கணக்கெடுப்பு படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்காதவர்களை பொறுத்தமட்டில் அருகில் வசிக்கும் பிற வாக்காளர்களிடம் விசாரணை மேற்கொண்டு உண்மையான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால், இதை தேர்தல் கமிஷன் மேற்கொள்வதாக தெரியவில்லை.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பட்சத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா? அல்லது அதற்கு எதிராக ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய முடியுமா? அல்லது மீண்டும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி வழங்கலாமா? என்பது குறித்து எந்த தெளிவான அறிவிப்பும் இல்லை. சிறப்பு திருத்தப்பணியில் இதுபோன்று பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை.

அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவாக இந்த நடைமுறை அமைந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, தமிழகத்தில் இந்த சிறப்பு பணியை மேற்கொள்வதற்கு 27.10.2025 அன்று தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory