» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு

வியாழன் 30, அக்டோபர் 2025 12:10:35 PM (IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 அமைச்சர்களும் உள்ளனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அமைச்சர் சபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்காமல் தேசிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்தது. இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதற்கிடையே அமைச்சரவையை கூட்ட முதல்-அமைச்சர் பினராயி விஜயன் முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு அமைச்சர்கள் 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியானது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்ததற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க இந்த முடிவை எடுத்தனர். 

இந்த பிரச்சினையை தொடர்ந்து தேசிய செயலாளர் எம்.ஏ.பேபியும், மாநில நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பரபரப்பான சூழலில் நேற்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசுடனான பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் இணைந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்காக அமைச்சர் சிவன் குட்டி தலைமையில் 7 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களும் சேர்க்கப்பட்டனர். அதாவது குழுவில் அமைச்சர்கள் சிவன் குட்டி, ராஜன், ரோஷி அகஸ்டின், பி.ராஜீவ், பிரசாத், கிருஷ்ணன் குட்டி, சசீந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினரின் அறிக்கை வரும் வரை ஒப்பந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நவம்பர் 5-ந் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவும் அமைச்சர் சபை கூட்டத்தில் முடிவு செய்து இருப்பதாக முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory