» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வட மாவட்டங்களை மிரட்டிய மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தது

புதன் 29, அக்டோபர் 2025 10:35:31 AM (IST)

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை மிரட்டிய நிலையில் ஆந்திராவில் நள்ளிரவில் ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி கடந்த 26-ந் தேதி புயலாக வலுப்பெற்றது. ‘மோந்தா’ என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயலை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினர். இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

மேலும் சென்னை அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்கக்கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் நகர்ந்தது. காக்கிநாடாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் மோந்தா புயல் நிலைகொண்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை அதிதீவிர புயலாக மோந்தா புயல் வலுவடைந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டது.

மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த 7 மாவட்டங்களுக்கும் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிவரை அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு புயல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார்.

காக்கிநாடா துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நள்ளிரவில் காக்கிநாடாவின் மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது.

புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் மோந்தா புயல் காரணமாக 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார். இந்த புயல் காரணமாக கபுலுபடாவில் 12.5 செ.மீ., விசாகப்பட்டினத்தில் 12 செ.மி மற்றும் ஆனந்தபுரத்தில் 11.7 செ.மீ அளவில் மழை பதிவானது.

‘மோந்தா’ புயல் காரணமாக ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள மல்கன்கிரி, கோரபூட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரனங்கபூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என 5 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory