» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.
4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் நேற்று காலை மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்பினர். அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை நடைபயணம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.ராஜஸ்தானின் எல்லையோரமான ஜெய்சல்மார், பார்மர் மற்றும் பிற பகுதிகளில் நேற்று காலை வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை சந்தைகள் திறக்கப்பட்டு, வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. நிறுத்தப்பட்ட ரெயில் சேவைகளை வடமேற்கு ரெயில்வே மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள், ராணுவத்தினர் 140 பேர் பலியான இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.இதனிடையே 'பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுப்போம்' என்றும், 'ஆபரேஷன் சிந்தூர்' நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த இரவு முழுவதும் பேச்சுவார்த்தையின் பின், இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (மே 12ம் தேதி) இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவன டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் என்ன வேலை? இந்தியா அமெரிக்காவிற்கு எதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமெரிக்கா வந்திருக்க வேண்டும். ஆனால் போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை ஏற்றிருக்கக் கூடாது. அமெரிக்காவிற்கு இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து என்ன தெரியும். அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு. அமெரிக்கா கூறியத்திற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
