» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)



சிலை கடத்தல், சிபிஐ விசாரணை தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நடைபெற்ற சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொன்.மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளிக்கவும் தடை விதிக்க வேண்டும். அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் பேட்டி அளிக்கும் போது சிபிஐக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இது போன்று அவர் பேசுவது வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் இருக்கிறது. திசைதிருப்பும் வகையிலும் இருக்கிறது. எனவே பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் சிபிஐ தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. 

அதே சமயம் காதர் பாஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொன். மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

மேலும் சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை உள்ளிட்டவை தொடர்பாக பத்திரிகை, ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கும் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிக்க கூடாது என்ற தடையையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். 

மேலும் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 வார காலத்திற்குள் பொன் மாணிக்கவேல் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 6 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அடுத்தகட்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பிப்பார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory