» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீவிபத்து; தமிழர்கள் உள்பட 14 பேர் பலி: பிரதமர் இரங்கல்!

வியாழன் 1, மே 2025 8:49:08 AM (IST)



கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மையப்பகுதியான பரா பஜாரின் மெச்சுவாபட்டியில் ரிதுராஜ் என்ற பெயரில் 6 மாடிகளை கொண்ட தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. 42 அறைகளுடன் விடுதியாக இயங்கி வந்த இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் 88 விருந்தினர்கள் தங்கியிருந்தனர்.

இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. மிக குறைந்த நேரத்தில் ஓட்டல் முழுவதும் தீ பிடித்ததால், அதில் இருந்த விருந்தினர்கள் குறிப்பாக மேல் மாடிகளில் இருந்தவர்கள் தீயில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

கடுமையான புகை மற்றும் தீ ஜூவாலைகளுக்கு மத்தியில் அவர்களால் வெளியேற முடியவில்லை. எனவே தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இதனால் அந்த இரவு நேரத்திலும் பரா பஜார் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் மிகவும் நெரிசலான அந்த பகுதியில் தீயணைப்பு வண்டிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதற்குள் ஓட்டலில் பெருத்த சேதம் ஏற்பட்டது. மேல் மாடிகளில் இருந்தவர்கள் பலரும் வெளியேற முடியாமல் கீழே குதித்தனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப்போராடினர்.

மறுபுறம் ஓட்டலின் உள்புறம் முழுவதும் உலை போல தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அதில் கருகியும், தீயால் எழுந்த கரும்புகையில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். பின்னர் 10 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் தீயணைக்கும் பணிகளில் இறங்கினர். அவர்களுடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளுக்கு உதவினர்.

அவர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை ஏணிகள் மற்றும் கயிறுகளுடன் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்குப்பின் நேற்று அதிகாலையில் இந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிறைவடைந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 64), கரூரை சேர்ந்த அவரது பேத்தி தியா (10), பேரன் ரிதன் (3) உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் புகையால் மூச்சுத்திணறியும், மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தும் உயிரிழந்தவர்கள் ஆவர்.

மேலும் இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கொல்கத்தா பிர்காத் ஹக்கிம் தெரிவித்தார்.

14 பேரை பலி கொண்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் உள்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஓட்டலில் தீ தடுப்பு விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என தெரிய வந்தது. மேலும் அங்கே கட்டுமானப்பணிகள் நடந்து வருவதால், ஓட்டலின் உள்ளே ஒரே மாடிப்படிக்கட்டும், வெண்டிலேட்டர் வழிகளும் மூடப்பட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் சட்ட விரோத கேளிக்கை பார் உள்ளிட்டவற்றால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ள அதிகாரிகள், இது முற்றிலும் அலட்சியப்போக்கு எனவும், தீ மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘கொல்கத்தா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துயரமும், வலியையும் ஏற்படுத்தியது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘கொல்கத்தா தீ விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’ என கூறியுள்ளார்.

மேலும் மேற்கு வங்காள அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். தீ விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கும் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து கொல்கத்தா போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory