» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லையில் 4-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

திங்கள் 28, ஏப்ரல் 2025 12:24:46 PM (IST)



எல்லையில் 4வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்திவரும்  பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

இந்தியாவின் நடவடிக்கையை போருக்கான ஆயத்தம் என்று விமர்சித்த பாகிஸ்தான், சில அடாவடி அறிவிப்புகளையும் வெளியிட்டது. வாகா எல்லையை இரு நாடுகளும் மூடியது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.ராஜ்ய ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுத்துவரும் வேளையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், பாகிஸ்தான் தனது அடாவடி செயலை நிறுத்தியபாடில்லை. 4-வது நாளாக நேற்று இரவும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory