» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவையில் அமளி விவகாரம்; கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் அதிரடி சஸ்பெண்ட்

வியாழன் 14, டிசம்பர் 2023 5:16:07 PM (IST)



மக்களவையில் இருந்து கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று  வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். நாடாளுமன்றம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது, இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த சம்பவம் குறித்து விளக்கம் தர வேண்டும். இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும், இந்த தவறு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை இரு அவைகளிலும் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

அதன் பின்னர், 2 மணிக்கு பிறகு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory