» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார்

புதன் 25, பிப்ரவரி 2026 3:12:05 PM (IST)

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது.

வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் காலமானார்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 01.02.2026 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது.

பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருத்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்லக்கண்ணு அவர்கள் 25.02.2026 அன்று பிற்பகல் 1 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதிரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர் நல்லகண்ணு. பெற்றோர்கள் ராமசாமி-கருப்பாயி.

கல்வி: ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். பின்னர், தமிழில் பி.ஓ.எல் படிப்பு இரண்டாண்டுகள் படித்த நிலையில் தீவிர அரசியல் ஈடுபாட்டால் அந்த படிப்பு முழுமையடையாமல் போனது. 

போராட்டங்கள்: 1936 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் அரசுக்கெதிராகச் செயல்படத் தொடங்கினார். 1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களோடு சிறுவனாகக் கேட்டுக்கொண்டபோது அவருக்கு வயது 12.

மணல் கொள்ளை: 2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை உத்தரவு பெற்றார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை நடப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory