» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடல் சீற்றம்: அசம்பாவிதங்களை தடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

திங்கள் 6, மே 2024 5:13:24 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக அசம்பாவிதங்கள்  நடைபெறுவதை தடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்   வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,  லெமூர் கடல்பகுதியில் அலையில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ கல்லூரி மாணவியினை இன்று (06.05.2024) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில்- கேரளம் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 05.05.2024 அன்று  கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு கடல் கொந்தளிப்பும் ஏற்படகூடும் என்றும், கடலில் 45 முதல்  65 கி.மீ. வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், 1.5 மீட்டருக்கு கடல் அலை எழும்ப கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் கரையோரத்தில் திடீரென அதிக அலைகள் ஏற்படும் என்பதால் கடலில் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடன்று மோதி சேதமடைவதை தடுக்கும் வகையில் போதிய இடைவெளியிட்டு பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்துமாறும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதோடு, எச்சரிக்கை விடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இச்சூழலில் இன்று லெமூர் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்ற பொழுது ஐந்து தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தனர். மூன்று மாணவ மாணவிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறப்பட்டது.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படமால் தடுக்கும் வகையில் மாவட்ட  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அனைத்து துறையினரும் கண்காணிப்பு பணியில் முழுவீச்சுடன் ஈடுபட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும்  கடற்கரை பகுதிகளில் மீன்வளத்துறை, உதவி இயக்குநர்கள் (பேரூராட்சி மற்றும் ஊராட்சி) மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் எச்சரிக்கை பலகைகள் உடனடியாக வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டள்ளது.

கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடல் அலையின் சீற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பிரின்ஸ் பயஸ், கண்காணிப்பாளர் மரு.ஜான்போஸ்கோ, உண்டு உறைவிட அலுவலர் மரு.ஜோசப்சென், உதவி உண்டு உறைவிட அலுவலர் மரு.ரெனிமோல் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory