» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!

வெள்ளி 17, மே 2024 3:26:21 PM (IST)தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (16.05.2024) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் மலையடிவாரம், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், கடலோர பகுதி, வாய்கால்கள், நீரேற்று பகுதிகள், அணை பகுதிகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள், வயல் நிலங்கள், கால்நடைகள் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து முதலுதவிகள் உள்ளிட்டவைகள் அளித்திடும் வகையில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி, வருவாய்த் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, மின்சாரவாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார்நிலையில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளங்களின் நீர் அளவிளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குளங்களில் 80% நீரினை மட்டுமே தேக்கிவைக்க வேண்டும். 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ள குளங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நீரினை வெளியேற்றிடவும், குளத்தின் கரையின் நிலைத்தன்மையினை உறுதி செய்து, குளத்தின் மறுகால் பகுதியின் மூலமாக தண்ணீர் செல்லக்கூடிய ஓடைப்பகுதியில் உள்ள முட்கள், செடி கொடிகள் போன்றவைகள் மூலமாக தண்ணீர் தடைபட்டு தேங்காவண்ணம் அகற்றிட வேண்டும். 

குளங்களில் உடைப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகுமாயின் போதிய அளவு மணல் மூட்டைகள் இருப்புவைக்கவும், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தின் அளவு 42 அடியாக வைக்கவும், பெருஞ்சாணி அணையில் நீர் மட்டத்தின் அளவு 70 அடியாக வைக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரெயில்வே காலனி மற்றும் எம்டி காலனி பகுதிகள் ஆகியவை தாழ்வான பகுதிகளாக அறியப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் மேற்படி பகுதியில் உள்ள மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்கவைக்கப்படும் இடங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியை சுற்றிலும் ப்ளீச்சிங் பவுடர் தூவி பாதுகாப்பான முறையில் வைக்கவேண்டும்.

மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஜேசிபி பொக்லைன், அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், மரம் அறுக்கும் இயந்திரம், பிளீச்சிங் பவுடர் ஆகியவை தயார்நிலையில் இருப்பில் வைக்கவும், சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளை மழைநீர் தேங்காதவாறு தண்ணீர் செல்லும் வகையில் சுத்தம் செய்து தயார்நிலையில் வைக்கவேண்டும்.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மணல்மூட்டைகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து பருகவேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் 15 தினங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யவும், குளோரினேசன் செய்யவும் வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நாகர்கோவில், கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட தாழ்வான பகுதிகளை பார்வையிடுவதோடு, மழைக்காலங்களில் ஆற்றின்கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தற்காலிக தங்கும் முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, போதிய அடிப்படை வசதிகள் இருப்பதினை அனைத்து வட்டாட்சியர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்காலிக தங்கும் முகாம்களின் கட்டிடத்தின் சாவி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருப்பதினை உறுதி செய்யவும், தற்காலிக தங்கும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான பாய், போர்வை மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவும், தற்காலிக தங்கவைக்கும் முகாம்கள் ஏற்படுத்தும் நிலை ஏற்படும்போது உடனடியாக தங்க வைக்கும் முகாம்களில் நாற்காலிகள், மின்விளக்குகள், ஜெனரேட்டர்கள் கூடிய வசதிகள் ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடுகள் சேதமடையும் போது உடனடியாக நிவாரணம் வழங்க TR 27 விதியின் கீழ் உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வருவாய் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழைக்காலங்களில் நியாயவிலைக்கடைகளில் நுகர்பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்வதோடு, அவற்றினை பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். மேலும் அதிகளவு நுகர்பொருட்கள் தேவைபடுமனால் அவற்றினை இருப்பில் வைக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பததோடு, இயற்கை இடர்பாடுகள் தொடர்பான விபத்துகள் ஏற்படும்போதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண் 1750 க்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தீயணைப்புத் துறை அலுவலர்கள் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும் போது அவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சாலையோரங்களில் உள்ள மரங்கள், குளத்தின் கரையில் உள்ள மரங்களின் நிலை குறித்தும் தேவை ஏற்படின் அதன் கிளைகளை அகற்றவும், மரங்கள் விழுந்து சாலையில் வாகனங்கள் செல்ல இயலாதநிலை ஏற்படின் மாற்று சாலை தேர்வு செய்யும் போது குறுகிய சாலைகளாக தேர்வு செய்யாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத சாலையினை தேர்வு செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக தங்கும் முகாமில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளவும், உடனடியாக மருத்துவ முகாம் நடத்திடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தற்காலிக தங்கும் முகாம்களில் போதியளவு மருத்துவர், செவிலியர்கள் பணியில் இருப்பதினை உறுதி செய்திட வேண்டும் என சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக் காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும். மேலும் கால்நடைகளுக்கு மழையினால் நோய்தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவம் செய்யவதோடு, நோய் பரவமால் தடுத்திடும் வகையில் கால்நடை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

மீனவர்கள் தங்கள் கட்டுமரம், மீன்பிடி படகு போன்றவை நிலை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும், statellite phone சரியான முறையில் இயங்குகின்றதா என்பதினை உறுதி செய்யவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிக்கையினை முறையாக மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும். மீட்பு பணிகளுக்கு உபயோகிக்கக்கூடிய தனியார் வசம் உள்ள சிறிய அளவிலான படகுகளை முன்கூட்டியே உரிமையாளரிடம் பேசி படகு எந்த இடத்தில் இருக்கும் என்பதனையும் தெரிந்து, அவர்களின் தொலைபேசி எண்களை பெற்று தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என மீன்வளத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டு சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றவும் மின்கம்பிகள் அறுந்து விழும் சமயங்களில் உடனடியாக பழுதுகள் சரிசெய்திடவும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் போதியளவு பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மின்சார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.காளீஸ்வரி(நாகர்கோவில்), செ.தமிழரசி(பத்மநாபபுரம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), மரு.இராதாகிருஷ்ணன் (கால்நடை), தோட்டக்கலைத் துறைதுணை இயக்குநர் ஷீலாஜாண், உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), பேரிடர் தனி வட்டாட்சியர் சுசீலா, நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், நகர்நல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory